ADDED : ஜூலை 02, 2023 09:41 AM
ஒருமுறை தோழர்களிடம், ''உங்களில் எவராவது சுவனத்திற்கு சென்றது உண்டா'' எனக்கேட்டார் நபிகள் நாயகம். அனைவரும் திகைத்தனர். ஆனால் அங்கு இருந்த அப்துல்லாஹ் இப்னு உமர் மட்டும் கையை உயர்த்தி, ''நான் சென்றுள்ளேன்'' என்றார்.
மீண்டும் அவர், ''உங்களில் எவராவது சுவனத்து நீரோடையில் நீர் அருந்தியது உண்டா. சுவனத்து உணவை சுவைத்தது உண்டா'' எனக் கேட்டார்.
அதற்கும் அப்துல்லாஹ் ''நான் அருந்தியிருக்கிறேன், சுவைத்திருக்கிறேன்'' என்றார். அருகில் இருந்து இதை கவனித்த அவரது தந்தை உமர், 'எனது மகன் மானத்தை வாங்கப்போகிறான். எழுந்து செல்லாமல் இன்னும் இங்கேயே இருக்கிறானே' என நினைத்தார். இதையெல்லாம் கேட்டவர்கள், 'நம்முடன் உலகில் உயிருடன் இருக்கிறார். இவர் மட்டும் எப்படி சுவனம் சென்றிருக்க முடியும்' என சந்தேகம் கொண்டனர்.
இவர்களது முகக்குறிப்பை கவனித்த நாயகம், ''அப்துல்லாஹ்வே. உங்கள் விளக்கத்தை மக்களிடம் கூறுங்கள்'' என தெரிவித்தார்.
''முன்பு தாங்கள் சுவனத்தை நேரில் கண்ட செய்தியை கூறினீர்கள். அப்போது நானும் உங்களுடன் நுழைந்ததாகவும் நீரோடையில் நீர் அருந்தியதாகவும் சுவனத்துப் பழங்களை சாப்பிட்டதாகவும் உணர்ந்தேன்'' என்றார்.
பார்த்தீர்களா... இவர் எந்த அளவிற்கு சுவனத்தை விரும்பியுள்ளார். மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என நினைத்து இருக்கிறார். இதுபோல் அனைவருக்கும் உதவி செய்தால் சுவனப்பாதை சாத்தியம்.