
இன்று பலரும் நன்றி உணர்வு இல்லாமல் இருக்கின்றனர். கேட்டால், 'இதனால் எனக்கு என்ன கிடைக்கப்போகிறது' என்று கூறுகின்றனர். நன்றி உணர்வு என்றால் என்ன.. உங்கள் வாழ்க்கையில் நடப்பவற்றை கூர்ந்து கவனியுங்கள். நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க, யாரெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரியுமா... அப்படி பார்த்தால் உங்களால் நன்றி உணர்வு இல்லாமல் இருக்க முடியாது. உதாரணத்திற்கு நீங்கள் சாப்பிடும் உணவை தயாரிப்பதற்கு எத்தனை பேர் வேலை செய்கிறார்கள் என்று தெரியுமா... விதை விதைத்தவர், அறுவடை செய்தவர், தானியத்தை வாங்கியவர், விற்றவர் என வரிசை நீண்டுகொண்டே போகும்.
'இது என்ன பெரிய விஷயம், நான் தான் அதற்கு பணம் கொடுக்கிறேனே' என சிலர் நினைக்கலாம். என்னதான் பணம் இருந்தாலும், அவர்களது உழைப்பு இல்லையென்றால் எதுவும் சாத்தியம் இல்லை.
ஒருமுறை ஜிப்ரயீல் என்னும் வானவர் நாயகத்திடம், ''உங்களுக்கு இறைவன் மலை அளவிற்கு தங்கம் தர தயாராக உள்ளான். அதை வாங்கி தர்மம் செய்யுங்கள்'' என்றார்.
அதற்கு அவர், ''மலையளவு தங்கம் வேண்டாம். எனக்கு ஒருநாள் உணவும், ஒருநாள் பசியும் இப்படி மாறி மாறி வேண்டும்'' என்றார்.
இதைக்கேட்ட வானவர், ''நீங்கள் கேட்பது விநோதமாக உள்ளதே. இதற்கு என்ன காரணம்'' என்று வினவினார்.
''ஒருநாள் உணவை பெறுவதன் மூலமாக இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாகவும், மறுநாள் பசித்திருக்கும் நிலையில் பொறுமையுள்ள அடியானாகவும் இருக்க விரும்புகிறேன்'' என்றார்.
இதைக்கேட்ட வானவர் வியந்து போனார்.
பார்த்தீர்களா... ஒருவருக்கு நன்றி உணர்வு எந்த அளவுக்கு வேண்டும் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்.

