ADDED : செப் 28, 2022 02:31 PM

ஒருநாள் வீதி வழியே சென்ற முல்லா ஓர் இடத்தை பார்த்தார். அங்கு பெரியவர் ஒருவர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். அவர் சொல்லும் செய்திகள் அனைத்தும் பயனுடையதாக இருப்பதால் அங்குள்ள மக்கள் அதனைக்கேட்டுக் கொண்டு இருந்தனர். என்னிடம் எதை வேண்டுமானாலும் கேட்கலாம் எனக்கு எல்லாம் தெரியும் என்ற அவரின் பேச்சில் தலைக்கனம் இருப்பது தெரிந்தது. இதைக் கவனித்த முல்லா, ''பெரியவரே நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்'' என்றார்.
அவரோ பலமாக சிரித்தவாறு தன்னடக்கம் இல்லாமல்''உங்கள் சந்தேகம் எதுவானாலும் கேட்கலாம்'' என்றார்.
முல்லாவோ ''பூட்டப்பட்ட வீட்டில் ஜன்னல் வழியாக கையை விட்டு அங்கிருந்த பீரோவில்
உள்ள விலை உயர்ந்த பொருளை எடுக்க வேண்டும் இதற்கு வழி என்ன'' எனக்கேட்டார்.
பெரியவரோ, ''உமக்கு
என்ன மூளைக்கோளாறா என்னிடம் கேட்கும் கேள்வியா இது'' என கோபப்பட்டார். மன்னிக்கவும் நீங்கள் தான் இது போன்ற கேள்விகளை கேட்டக்கூடாது என கூறவில்லையே என்று பதிலுரைத்தார் முல்லா.
எல்லாமே தெரியும் என்ற இறுமாப்பு அவரை விட்டு நீங்கியது. நல்ல சமயத்தில் எனது அறிவுக்கண்னை திறந்தீர்கள் என சொன்னார் பெரியவர். முல்லாவை அனைவரும் பாராட்டினர்.

