பூமியைப் படைப்பதற்கு முன் இறைவன் முதலில் தண்ணீரை படைத்தான். தண்ணீர் மீது நெருப்பைப் படர விட்டான். இந்த நெருப்பில் ஒளியும், இருளும் இருந்தது. ஒளியைக் கொண்டு வானவர்கள் படைக்கப்பட்டனர். இவர்கள் ஒளியில் இருந்து படைக்கப்பட்டிருந்ததால் பாவங்கள் செய்யாது இறை வணக்கத்திலேயே மூழ்கியுள்ளனர். நெருப்பில் இருந்து கிளம்பிய புகையில் இருந்து ஷைத்தான்கள் படைக்கப்பட்டதால் அவர்கள் தீமை செய்வதிலேயே மூழ்கியுள்ளனர். நெருப்பில் ஒளியும், இருளும் கலந்திருந்ததால் நெருப்பைக் கொண்டு படைக்கப்பட்ட ஜின் வர்க்கத்தில் நன்மையை நாடும் முஸ்லிம் ஜின்களும், தீமையை நாடும் காபிர் ஜின்களும் உள்ளனர். எல்லா ஜின்வர்க்கத்தினரும் ஆரம்ப நிலையில் இறையச்சம் கொண்டவர்களாகவே இருந்து வந்தனர். பிறகு இவர்களின் பெருக்கம் அதிகமான பின் இறையச்சமற்றவர்களும் தோன்ற ஆரம்பித்தனர். இறைவன் இவர்களைத் திருத்தப் பல சீர்திருத்தவாதிகளை அனுப்பினான். பலர் திருந்தாத நிலையிலேயே இருந்ததால் இவர்களை ஒழிக்க வானிலிருந்து வானவர்களை அனுப்பினான். ஜின்களில் பலர் கொல்லப்பட்டனர். சிலர் மலைகளில் ஒளிந்தனர். சிறு வயதுள்ள ஜின்கள் கைது செய்யப்பட்டனர்.