நாலு பேருடன் பேச போகிறீர்களா? இதோ இருக்கு விதிமுறைகள்!
நாலு பேருடன் பேச போகிறீர்களா? இதோ இருக்கு விதிமுறைகள்!
ADDED : செப் 01, 2017 09:22 AM

''நாலு பேர் கூடும் இடத்தில் நாகரிகமாக நடந்து கொள்ள வேண்டும். நாகரிகமாக பேச வேண்டும், நல்லதையே பேச வேண்டும்,” என்கிறது இஸ்லாம்.
பொது இடத்தில் அமரும் போது, நல்லவர்கள் அருகே உட்காருங்கள். அங்கே பேசுவோருடன் நீங்களும் இணைந்து கொள்ளுங்கள். அப்படி பேசாமல் இருந்தால், 'மகாகர்வி' என மற்றவர்கள் நினைக்க வாய்ப்புண்டு.
நபிகள் நாயகம் தன் தோழர்களுடன் பேசும் போது, தானும் பேசுவார். மற்றவர்கள் சொல்லும் கருத்தையும் கேட்பார்.
பேசும்போது, முகத்தை உம்மென வைத்திருக்கக் கூடாது. சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அந்தப் பேச்சு இறைவனை பற்றியதாக இருக்க வேண்டும். சிலர் பேசும் போது, ஒரேயடியாக போரடித்து விடுவர். அப்போது மக்களின் கவனம் திசை திரும்பும். அந்த சமயத்தில் நல்லதை செய்யும் உலகியல் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு கூட்டத்திற்கு சென்றால், கிடைக்கும் இடத்தில் உட்கார்ந்துகொள்ள வேண்டும். ஊரில் பெரிய வி.ஐ.பி., என்பதற்காக, அமர்ந்திருப்பவர்களை எழச் சொல்வது, அவர்களை தள்ளிக் கொண்டு முன்னால் செல்வதை தவிர்க்க வேண்டும். இது பலரது வெறுப்பைச் சம்பாதிக்க ஏதுவாக அமையும். வட்டமாக அமர்ந்து பேசும் பட்சத்தில் நடுவில் காலியாக இருக்க வேண்டும். நட்ட நடுவில் அமர்ந்து, தன்னை தனித்தன்மை உள்ளவராக காட்டிக் கொள்ள முயற்சிக்க கூடாது.
பேசும்போது, தவிர்க்க முடியாத காரணத்தால், ஒருவர் எழுந்து வெளியே செல்ல வேண்டி வந்தால், அவரது இடத்தில் போய் அமர்ந்து விடக்கூடாது. அவர் இனி வரமாட்டார் என்று உறுதியாக தெரிந்தால் மட்டுமே, அவரது இருக்கையில் அமரலாம்.