ADDED : செப் 30, 2010 04:37 PM

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமையிலும் மக்களுக்கு அறிவுரை புகன்று வந்தார்கள். அப்போது அவர்களிடம் ஒரு மனிதர் கூறினார்:
''அபூ அப்துர் ரஹ்மான் அவர்களே! தாங்கள் எங்களுக்கு நாள்தோறும் அறிவுரை கூறவேண்டும் என்று நான் விரும்புகின்றேன்.'' அதற்கு அவர்கள் ''நாள்தோறும் நான் உரையாற்றினால் நீங்கள் சலிப்படைந்து விடுவீர்கள். உங்களை சலிப்புக்குள்ளாக்க நான் விரும்பவில்லை. இந்தக் கருத்து தான் நாள் தோறும் உரையாற்றவிடாமல் என்னைத் தடுக்கின்றது. அண்ணல் நபி(ஸல்) அவர்கள் இடைவெளி விட்டு அறிவுரை புரிந்ததைப் போல் நானும் இடைவெளிவிட்டு அறிவுரை புரிகின்றேன். அண்ணலார் இடைவெளிவிட்டு அறிவுரை புரிந்தது, நாம் சலிப்படைந்து விடக்கூடாது என்பதற்காகத் தான்.'' (புகாரி, முஸ்லிம்)
விளக்கம்: அண்ணல் நபி(ஸல்) அவர்களுடைய செயலாலும், அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்(ரலி) அவர்களின் செயலாலும் உறுதிப்படுவது இதுதான்: மார்க்க அழைப்புப் பணி செய்பவர்கள் ஒருவரைக் கட்டாயப்படுத்தி அவருக்கு அறிவுரை செய்யக்கூடாது. மாறாக, முதலில் நிலைமைகளை ஆராயவேண்டும். சூழ்நிலை சந்தர்ப்பங்களையும் பார்த்து அழைப்புப்பணி செய்தல் வேண்டும். எந்நேரமும் மழையை எதிர்பார்த்துக் கொண்டிருந்து மழை பெய்தவுடனேயே பூமியை பக்குவப்படுத்துவதில் இறங்கி விடுகின்ற விவசாயியைப் போன்றிருக்கவேண்டும். சூழ்நிலை சந்தர்ப்பங்கள் பார்க்காமல் அழைப்புப்பணி செய்வது சரியன்று. இதுபோன்றே சரியான சந்தர்ப்பத்தைத் தேடாமல் அலட்சியமாக இருப்பதும் சரியன்று. பல சந்தர்ப்பங்கள் கிட்டிக்கொண்டேயிருந்தும் தன் கண்ணியத்தைக் காத்துக் கொள்வதாக எண்ணிப் பேசாமல் இருப்பதும், கிடைத்த வாய்ப்பை தொலைத்து விடுவதும் சரியன்று.
உரையாற்றுவதில் அளவு
அறிவிப்பாளர்: இக்ரிமா(ரலி)
அப்துல்லாஹ்பின் அப்பாஸ்(ரலி) அவர்கள் கூறினார்கள்:
''(இக்ரிமாவே!) ஒவ்வொரு வாரமும் ஒருமுறை அல்லது இருமுறை உரையாற்றுவீராக! அதிகபட்சம் மூன்று முறைகளுக்கு மேல் உரையாற்றாதீர்! இந்த குர்ஆனின் மீது மக்களுக்கு வெறுப்பூட்டாதீர்! மக்கள் தங்கள் தனிப்பட்ட உரையாடல் எதிலாவது ஈடுபட்டிருக்க, நீர் அங்கு சென்று அவர்களுடைய உரையாடலை
இடைமறித்து உம்முடைய சொற்பொழிவைத் தொடங்கிவிட வேண்டாம்! அவ்வாறு நீர் செய்வீராயின் அவர்களை மார்க்கச் சொற்பொழிவுகளின் மீது வெறுப்புடையவர்களாய் ஆக்கிவிடுவீர். மாறாக, இத்தகைய சந்தர்ப்பங்களில்மவுனத்தை மேற்கொள்ளுங்கள். அவர்களாக விரும்பி உம்மிடம் அறிவுரை கூறும்படிக் கோரும்போது அறிவுரை கூறுவீராக! மேலும் கவனியும். உம் உரையில் அடுக்குமொழி வாசகங்கள் கூறுவதை தவிர்ப்பீராக! ஏனெனில் நான் நபி(ஸல்) அவர்களையும் அவர்களுடைய தோழர்களையும் சிரமப்பட்டு வாசகங்கள் அமைத்து பேசுகிறவர்களாய் காணவில்லை''.
(புகாரி)
இமாம் ஸர்கஸி(ரஹ்) அவர்கள் 'மப்ஸுத்' என்னும் நூலில் நபிமொழியொன்றை எடுத்தெழுதியுள்ளார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
''மார்க்க போதனை புரியும்போது, மக்கள் இறைவணக்கத்தையும் இறைவனுக்கு கீழ்ப்படிதலையும் வெறுக்கத் தொடங்கும் வகையில் அமைந்த போதனை முறையைக் கையாளாதீர்கள்.''
விளக்கம்: 'அறிவுரை புரியும்படி மக்கள் கோரும்போது' என்பதின் பொருள்: அவர்கள்தம் விருப்பத்தை தம் நாவால் வெளிப்படுத்தும்போது அல்லது அவர்கள் மார்க்கப்போதனையைச் செவியேற்கும் மனநிலையில் இருக்கிறார்கள் என்று அவர்களுடைய முகபாவத்தின் வாயிலாகத் தெரிந்து விடும்போது உங்கள் உரையைத் தொடங்குங்கள் என்பதாகும்.
(அண்ணல் நபிகளார் வாழ்வினிலே....நூலில் இருந்து)
