ADDED : நவ 26, 2010 03:34 PM
வார்த்தை ரொம்பவே வலிமையானது. 'ஒரு சொல் கொல்லும், ஒரு சொல் வெல்லும்' என்பது நம்மவர்கள் கூறும் முதுமொழி. குரூர குணத்தைத் தன்னுள் நிரப்பி வைத்திருக்கும் மனிதனைக் கூட அன்பான வார்த்தைகைளால், நம் பக்கம் அள்ளிக்கொள்வதோடு அவரது மனசுக்குள் ஒரு 'நற்குணத்தன்மையை' வளர்த்து விட முடியும். நம்மைச் சுற்றி இருப்பவர்களோடு என்றென் றும் சிரித்த முகத்தோடு பழகத்துணிந்தாலே நமக்கான நட்பு வட்டம் பல்கிப்பெருகிடும். செல்வத்தை ஏழை எளியோருக்கு ஈவது தான் தர்மம் எனப்படுகிறது. ஆனால், பெருமானார் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், ''பிற மனிதரிடம் புன்முறுவல் காட்டுவதும் தர்மமாகும்,'' என நவின்றுள்ளார்கள். சோர்வோ, தாழ்வோ துன்பமோ நபிகளாரிடம் எப்போதும் இருந்ததில்லை. புன்னகை பூத்த முகத்தையே பார்க்க முடிந்திருக்கிறது.ஒருமுறை அபூஜஹீல் என்ற கொடியவன் நபிகளைப் பார்த்து, ''உங்கள் முகம் அவலட்சணமாய் இருக்கிறது,'' என்று கூறினான். அதற்கு நபிகளார், ''ஆம்!'' என்று கூறி, புன்முறுவல் பூத்த முகத்தைக் காட்டினார்கள். அதேநேரம் அங்கே வந்த நபிகளாரின் தோழர் அபூபக்கர் அவர்கள் நபிகளைப் பார்த்து, ''தங்கள் முகம் மருவற்ற முழுமதியைப் போல் பிரகாசிக்கிறது, அழகு ததும்புகிறது,'' என்பதாய் சொன்னார்கள். அந்த புகழ்மொழிக்கும் கூட நபிகளார் அவர்கள் 'ஆம்' என்றே புன்முறுவல் பூத்தார்கள்.
இதைக் கண்ட அங்கிருந்த நபிகளாரின் தோழர்கள், ''இரண்டு பேருக்குமே இனிய முகம் காட்டினீர்களே! ஏன்?'' என்றனர். ''நான் அனைவருக்குமே ஒரு கண்ணாடி போலாவேன். அபூஜஹீல் தன் முகத்தை என்னில் பார்த்தான். அது அவலட்சணமாக இருந்தது. அபூபக்கர் தம் முகத்தை என்னில் பார்த்தார்.
எனவே அது பூரண சந்திரனை ஒத்திருந்தது. எனவே, இரண்டிற்கும் 'ஆம்' என புன்முறுவல் பூத்தேன்,'' எனக் கூறினார்கள். எதிரிக்கும் இன்முகம் காட்டுகிற பண்பு மகத்தான ஒன்று. இந்த பண்பை இன்று நம்மில் பலரும் தொலைத்து விட்டிருக்கிறோம். இந்த குணத்தைப் பெற்று அனைத்து இதயங்களையும் நம் வசம் ஈர்ப்போமே!
