sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

சத்குருவின் ஆனந்த அலை

/

உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்!

/

உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்!

உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்!

உங்களுக்கு எதிரான ஜோசியத்தைப் பொய்யாக்குங்கள்!


PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : ஜூன் 20, 2025 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெற்றி, தோல்விகளில் துவண்டுக் கிடக்கும் இவ்வுலகில், அவனுக்கு மட்டும் எப்படி வெற்றி கிட்டியது? எனக்கு எட்டாக்கனியாகவே உள்ளதே? என்று ஜாதகத்தின் பெயர் சொல்லி அலுத்துக் கொள்பவரா நீங்கள்? வெற்றிக்கனி உங்களுக்கு கிடைக்க இதோ சில குறிப்புகள்…

சத்குரு: தெருவோர பிச்சைக்காரனைப் பாருங்கள். துருத்திய எலும்புகளுடன் அசைய முடியாமல் ஓய்ந்து படுத்திருப்பான். அடுத்த பிச்சைக்காரன் இவன் இடத்தில் வந்து உட்கார்ந்துவிட்டால், காச்மூச்சென்று கத்தி, சண்டை போடுவான்.

இது எதனால்?

உடலிலும், மனதிலும் வலு இல்லாதவர்களுக்குக் கூட கோபமோ, வெறுப்போ, ஆத்திரமோ முழு வேகத்துடன் வெளிப்படுகிறது. தன் சக்தியைச் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாத மனிதனுக்கு உணர்ச்சி வசப்படுவது மட்டுமே சுலபமாகச் சாத்தியப்படுகிறது.

அதனால், பல நூறு மைல்களுக்கு அப்பால் உள்ளதைக் கைப்பற்ற ஆசைப்படும் பெரும்பாலான மனிதர்களுக்கு, அடுத்த மூன்று அடிகளைத் தாண்டி யோசிக்கத் தெரிவதில்லை. திட்டமிட்டுத் திறமைகளை பயன்படுத்தத் தெரிவதில்லை. எடுத்ததற்கெல்லாம் அச்சம் கொள்வார்கள். ஒவ்வொரு அடியையும் சந்தேகத்துடன் எடுத்து வைப்பார்கள்.

உணர்ச்சிவசப்படுவதில் இருக்கும் தீவிரம், வலுவான எண்ணங்களை உருவாக்கிக் கொள்வதில் அவர்களுக்குக் கிடையாது. அதனால், வெற்றியை நினைக்கும்போதெல்லாம், கூடவே தோல்வி பற்றிய சந்தேகமும் அலை மோதுகிறது. நசிகேதனைப் பற்றிக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஐந்து வயதானபோதே மரணத்தைப் பற்றி அறிந்துகொள்ளும் ஆர்வம் அவனுக்கு வந்துவிட்டது.

மரணத்தின் தலைவன் எமன் என்பதைப் புரிந்து கொண்டு, அவன் இருப்பிடத்தின் வாசலில் போய் அமர்ந்தான். எமன் வந்தான். சாப்பாடு, தண்ணீர் இல்லாமல் ஒரு சிறுவன் பல நாட்களாக அங்கே அமர்ந்திருப்பது கண்டு நெகிழ்ந்தவன், 'என்ன வரம் வேண்டுமோ, கேள்!' என்றான்.

'மரணத்துக்குப் பிறகு என்ன நடக்கும்? அதை அறிந்து கொள்ள வேண்டும்' என்றான் நசிகேதன்.

'தேவர்களுக்குத் தருவதெல்லாம் தருகிறேன். வேறென்ன வேண்டுமோ, கேள் தருகிறேன். ஆனால், மரணத்தைப் பற்றி மட்டும் கேட்காதே' என்று சொன்னான் எமன்.

நசிகேதன் மசியவில்லை. நசிகேதனைத் தவிர்ப்பதற்காக எமன் பல மாதங்கள் தன் இருப்பிடத்துக்கே திரும்பாமல் கூட இருந்து பார்த்தான். சிறுவன்தானே, எப்படியும் பசி தாங்காமல் புறப்பட்டு போய்விடுவான் என்று எமனுக்கு நம்பிக்கை. நீண்ட காலம் கழித்துத் திரும்பி வந்து பார்த்தால், நசிகேதன் அதே இடத்தில் பசி, தூக்கம் பாராமல் காத்திருந்தான். எமன் திகைத்தான்.

'தேவர்களுக்கும், கடவுள்களுக்கும் கூடத் தெரியாத ரகசியம் அது. நீ ஐந்து வயது பாலகன். அதை உனக்கு எப்படிச் சொல்ல முடியும்?' என்றான் எமன்.

ஆனால், விடை தெரிந்து கொள்ளாமல் போவதில்லை என்ற தீர்மானத்தோடு நசிகேதன் அங்கேயே விடாப்பிடியாக நின்றான்.

அவனுடைய எண்ணத்தில் தீவிரம் காரணமாக, எமனுலகத்தின் வாசலிலேயே அவனுக்கு ஞானம் கிடைத்துவிட்டது. அவன் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் அங்கேயே தெரிந்து கொண்டுவிட்டான்.

கடைசிவரை எமன் பதில் சொல்லாமல் போய்விடுவானோ என்று அந்த ஐந்து வயது பாலகனுக்குச் சந்தேகம் வரவில்லை. அவனிடமிருந்த தீவிரம் உங்களிடம் இல்லாததால்தான் அச்சமும், சந்தேகமும் கூடவே வருகின்றன.

எண்ணங்களால் ஆட்டுவிக்கப்படுகிறீர்கள். ஆனால், அவற்றை எப்படிக் கையாள்வது என்று தெரியாமல் தவிக்கிறீர்கள். உங்கள் மீது நம்பிக்கை இல்லாதபோதுதான், முடிவைப் பற்றிய கவலை வருகிறது.

எதைத் திட்டமிட்டாலும், அது நிறைவேறுமா என்ற சந்தேகமும் கூடவே துரத்துகிறது. அதற்காக ஜாதகங்களைத் தூக்கிக் கொண்டு ஜோதிடர்களிடம் போகிறீர்கள். நாள், நட்சத்திரம் சரியாக இல்லை என்று ஆசைகளைத் தள்ளிப் போடுகிறீர்கள்.

கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஒரு ஆற்றங்கரையைக் கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், 'மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்' என்று சொன்னார்.

கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகிவிடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி. ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்துவிட்டது. தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.

தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். 'எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா?' என்று கேட்டான்.'இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்திருப்பேன்' என்றார் ஜோசியர்.

தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, 'இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?' என்று கேட்டான்.

ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. 'முடியும்.. முடியும்' என்று அலறினார்.

'அவ்வளவுதான் மன்னா ஜோசியம்! உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்' என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.

கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.

நீங்கள் தீர்மானமாக இருந்தால், கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.

வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி!






      Dinamalar
      Follow us