sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

சத்குருவின் ஆனந்த அலை

/

முறிந்த நட்பு மீண்டும் தொடர என்ன செய்ய வேண்டும்?

/

முறிந்த நட்பு மீண்டும் தொடர என்ன செய்ய வேண்டும்?

முறிந்த நட்பு மீண்டும் தொடர என்ன செய்ய வேண்டும்?

முறிந்த நட்பு மீண்டும் தொடர என்ன செய்ய வேண்டும்?


PUBLISHED ON : பிப் 22, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : பிப் 22, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் என் நண்பனுக்கும் எனக்கும் கருத்து வேறுபாடு வந்து, அவனிடம் சில கடுமையான வார்த்தைகளைப் பேசிவிட்டேன். அதற்கப்புறம் அவன் என்னிடம் இருந்து விலகிவிட்டான். எங்கள் பழைய நெருக்கத்தைக் கொண்டுவர என்னால் முடிந்தவரை பலமுறை முயன்றுவிட்டேன், முடியவில்லை. என்ன செய்வது?

சத்குரு:

'பிறப்பினாலோ அல்லது சமூக பந்தத்தினாலோ, ஓர் உறவு அமைந்துவிட்டால், அது பாதிப்புகளுக்கு அப்பாற்பட்டது என்று நினைப்பது தவறு. மனைவியோ, கணவனோ, தாயோ, தந்தையோ, குழந்தையோ, நண்பரோ, எந்த நெருக்கமான உறவாக இருந்தாலும், அது இரும்புக் கவசம் அணிந்திருப்பதில்லை.

உறவு என்பது மிக அழகான கண்ணாடி ஜாடி போன்றது. அதை எப்படிக் கையாள்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் அதன் ஆயுள் தீர்மானிக்கப்படுகிறது. அதைக் கவனம் இன்றிக் கீழே போட்டுவிட்டால், அது நொறுங்கித்தான் போகும். நொறுங்கியதை மறுபடி பழைய வடிவத்துக்குக் கொண்டுவருவது இயலவே இயலாது என்று நான் சொல்லவில்லை. ஆனால், அது மிகவும் கடினமான வேலை.

வாயை சுத்தம் செய்யும் திரவம்...

கடற்கரையில் சங்கரன்பிள்ளை நடந்துகொண்டு இருந்தார். ஒரு பையன் ஓடிவந்தான். அவரிடம் 'சார், வாயைச் சுத்தம் செய்யும் திரவம் வாங்கிக்கொள்ளுங்கள்' என்று பாட்டில் ஒன்றை எடுத்துக் காட்டினான்.

'என்ன விலை?' என்றார் சங்கரன்பிள்ளை.

'500 ரூபாய்'

'கொள்ளையாக இருக்கிறதே, வேண்டாம்'.

'சரி பிஸ்கட்டாவது வாங்கிக்கொள்ளுங்கள் சார். இரண்டே ரூபாய்தான்'.

சங்கரன்பிள்ளை பரிதாபப்பட்டு வாங்கினார். பிஸ்கட்டை வாயில் போட்டவர் 'தூ... தூ...' வென்று துப்பினார்.

'என்ன கண்றாவி இது? இவ்வளவு மோசமாக நாறுகிறதே?'

'இப்போது சொல்லுங்கள் சார்... வாயைச் சுத்தம் செய்யும் திரவம் வேண்டுமா?'

இதைப்போலத்தான் பிரச்சினைகளை நாமே உருவாக்கிவிட்டு, அவற்றுக்குத் தீர்வு தேடி அலைகிறோம். எப்போதும், உங்கள் எண்ணத்துக்கு ஏற்ப மற்றவரை மாற்றவேண்டும் என்று நினைப்பது சரியல்ல. நீங்கள் என்ன செய்தாலும், அதையெல்லாம் தாண்டி எப்படிப்பட்ட உறவும் நிலைத்து இருக்கும் என்ற உத்தரவாதம் எதுவும் இல்லை.

சில உறவுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கையே இல்லை என்று உணர்ந்தவர்கள்கூட, ஏதோ காரணத்தினால் பிரிய நேரிடும். அப்படிப் பிரிந்து இருப்பது, சேர்ந்து இருந்ததைவிட அதிக நிம்மதி தரும் என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டால், எதற்கு மறுபடியும் தலைவலி என்று ஒதுங்கி இருக்கத்தானே நினைப்பார்கள்?

உங்கள் நண்பர் ஒருவேளை ஏதோ ஓர் ஆதாயத்துக்காக உங்களுடன் நட்பு பாராட்டியிருந்தால், அவருக்கான ஆதாயம் கிடைத்ததும், பிரிவதற்கான சந்தர்ப்பத்திற்காக காத்திருக்கலாம். நீங்கள் சொன்ன வார்த்தைகளைக் காரணம் காட்டி, அவர் ஒதுங்கி இருக்கலாம். அவர் கோபத்திலோ, வருத்தத்திலோ இருந்தால் அந்தக் கோபத்தைக் குறைக்கப் பார்க்கலாம். விட்டதடா தொல்லை என்று அவர் ஒதுங்கப் பார்த்தால், யார் சொல்வதற்காகவும் அவர் உங்களுடன் மீண்டும் நண்பர் ஆகப்போவதில்லை.

மன்னிப்பு கேளுங்கள்

ஒவ்வோர் உறவின் ஏமாற்றமும் சரிப்படுத்தக்கூடியதாக இருக்கவேண்டும் என்பதுதான் என் விருப்பமும். ஆனால் அத்தனை பேரும் சரிசெய்யக் கூடியவர்களாக இருப்பதில்லை. அதற்கான பக்குவம் பெற்றவர்களாக அவர்கள் விளங்குவது இல்லை. இந்த உண்மையை முதலில் முழுமையாகப் புரிந்து ஏற்றுக்கொள்ளுங்கள். இப்போது அந்த நண்பருடைய உறவு உங்களுக்கு முக்கியமானதா என்பதைத் தீர்மானியுங்கள். முக்கியமானது என்றால், செய்த தவறுக்கு அவரிடம் மனதார மன்னிப்புக் கேளுங்கள்.

'ஏதோ ஓர் அறியாமையில், முட்டாள்தனத்தில் தவறாகப் பேசிவிட்டேன். என் உணர்வு உன் நட்பைத்தான் விரும்புகிறது' என்று அவருக்கு தெளிவாக எடுத்துச் சொல்லுங்கள். சொல்லிவிட்டு முடிவு செய்ய அவருக்கு அவகாசம் கொடுங்கள். அவர் நெருங்கி வருகிறாரா, பாருங்கள்.

அந்த இடைவெளிக்கூடக் கொடுக்காமல், மேலும் மேலும் அவரை நட்புக்காக வற்புறுத்தினால், அது மேலும் எரிச்சலைக் கிளப்பிவிடக்கூடும். அவர் உடனடியாக இறங்கிவராமல் போகலாம். இன்றைக்கு மன்னிப்பு கேட்டுவிட்டு, நாளைக்கு அதே தவறை நீங்கள் செய்வீர்கள் என்று அவர் நினைத்தால், அவர் உங்கள் மன்னிப்பைப் பொருட்படுத்தாமல் போகக்கூடும். அப்படி ஒரு நிலை வந்தால் உங்கள் வாழ்க்கையைச் சற்று ஊன்றி கவனியுங்கள். உங்கள் வார்த்தைகளை முழுமையாக நம்ப முடியுமா? உங்கள்மீது மற்றவர்கள் முழுமையான நம்பிக்கை வைக்கும் அளவு நீங்கள் நடந்துகொண்டு இருக்கிறீர்களா என்று யோசியுங்கள்.

நாம் பீகாரில் இருக்கும்போது, குறிப்பிட்ட நேரத்தில் ரயில் வந்து சேர்ந்துவிட்டால், நம் வாட்ச் நின்றுவிட்டதா என்று ஆட்டிப் பார்க்கிறோம். இதுவே ஜப்பானில் இருந்தால், ரயிலைப் பார்த்துவிட்டு வாட்ச்சில் நேரத்தைச் சரிசெய்வோம்.

வெளியே வந்த ஆட்டின் குடல்

சாராயத்திற்கு அடிமையாகிவிட்ட ஓர் இளைஞன் இருந்தான். 'இப்படி மோசமான சாராயத்தை நீ தொடர்ந்து குடித்தால், உன் உயிருக்கு ஆபத்து. ஒருநாள் உன் குடலே வெளியே வந்துவிடும் என்று அவனுடைய நண்பன் பயமுறுத்திப் பார்த்தான். ஆனால், அவனோ தினமும் குடித்துவிட்டு வாந்தி எடுக்கும் தன் பழக்கத்தை மாற்றிக்கொள்ளவில்லை. பார்த்தான் நண்பன், ஒருநாள் ஒரு ஆட்டின் குடலை வாங்கி, அவன் வாந்தி எடுக்கும் இடத்தில் போட்டுவைத்தான். அன்றைக்குக் குடித்துவிட்டு வாந்தி எடுக்கப்போனவன் பதறிக்கொண்டு திரும்பி வந்தான்.

'டேய், நீ சொன்னபடியே இன்று என் குடல் வெளியே வந்துவிட்டது' என்றான்.

'சரி, இப்போதாவது குடிப்பதை நிறுத்து...'

'கவலைப்படாதே நண்பா... வெளியே வந்ததை எடுத்து உள்ளே போட்டுக்கொண்டுவிட்டேன்' என்றான் அவன்.

நண்பன்மீது எவ்வளவு நம்பிக்கை இருந்தால், அங்கே கிடந்த குடல் தன்னுடையதாகத்தான் இருக்கும் என்று அவன் நினைத்து இருப்பான். அப்படி ஒரு நம்பிக்கை உங்கள்மீது உங்கள் நண்பருக்கு இருக்கிறதா? உங்கள் நண்பரிடம் மட்டுமல்ல, நீங்கள் சந்திக்கும் அத்தனை பேரிடமும் அப்படி ஒரு நம்பிக்கையை நிலைநாட்டும் வண்ணம் நடந்துகொள்ளுங்கள். ஏதோ ஒன்றைச் சாதிக்க மட்டும் அப்படிச் செய்யாமல், அதையே உங்கள் குணநலனாக மாற்றிக்கொள்ளுங்கள். இது நேராத வரை உங்களால் அற்புதமான உறவுகளை அமைத்துக்கொள்ள முடியாது.

நீங்கள் சொன்னால் அதை வேதவாக்கியமாக எடுத்துக்கொள்ள இயலும் என்ற ஒரு சூழ்நிலையை நீங்கள் உருவாக்கினால், நீங்கள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர் என்று ஒரு நம்பிக்கை மற்றவரிடத்தில் பிறந்துவிட்டால், அப்போது உங்கள் வேலை சுலபம். நீங்கள் போய் மன்னிப்பு கேட்டால், உங்கள் நண்பர் மனம் மாறுவார்'.






      Dinamalar
      Follow us