sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

சத்குருவின் ஆனந்த அலை

/

வெள்ளியங்கிரி மலை ஏன் ஏறுகிறோம்? காண வேண்டிய இடங்கள் என்னென்ன?

/

வெள்ளியங்கிரி மலை ஏன் ஏறுகிறோம்? காண வேண்டிய இடங்கள் என்னென்ன?

வெள்ளியங்கிரி மலை ஏன் ஏறுகிறோம்? காண வேண்டிய இடங்கள் என்னென்ன?

வெள்ளியங்கிரி மலை ஏன் ஏறுகிறோம்? காண வேண்டிய இடங்கள் என்னென்ன?


PUBLISHED ON : மே 03, 2024 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 03, 2024 12:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சத்குரு: ஒரு மலை புனிதமடையுமா என்ன? நான் வெள்ளியங்கிரி மலைகளை புனிதம் என அழைக்கக் காரணம், அதில் ஏறுவது சிரமம் என்பதால் அல்ல; நான் உட்பட பல பேருக்கு இம்மலை மிகப் புனிதமானதாய் இருக்கக் காரணம், இங்கு நிலவும் சூழல்தான்!

வெள்ளியங்கிரி மலை வரலாறு


நாட்டின் தென்கோடி முனையிலே 'சிவனையே மணப்பேன்' என விடாப்பிடியாய் நின்ற ஒரு பெண், தன்னை ஈசனுக்கே உரியவளாய் ஆக்கிக்கொள்ள ஆயத்தப்படுத்திக் கொண்ட பெண், ஈசன் இந்நாளுக்குள் தன்னை அடைய வேண்டும் என உறுதியெடுத்துக் கொண்ட பெண், “ஈசன் வராது போனால், நான் உயிர் துறப்பேன்” என சூளுரைத்திருந்தாள். இதனை அறிந்த சிவன் அவளைத் தேடி தென்னிந்தியா நோக்கி வர, இடையில் சதி செய்யப்பட்டு, சிலதூரத் தொலைவில் அவளை அடைய முடியாமல் போனார். அந்தப் பெண்ணும் நின்றபடியே உயிர் துறந்தாள். இன்றுகூட அவள் கன்னியாகுமரியாய் நின்ற கோலத்தில் இருக்கிறாள். இதுவே, இந்தியாவின் தென்கோடியில் கன்னிகோவிலாய் உயர்ந்து நிற்கிறது.

தன்னால் குறித்த நேரத்தில் சென்றடைய இயலவில்லையே என மனஞ்சோர்ந்த சிவனுக்கு, தன் விசனத்தைக் கரைக்க ஓர் இடம் தேவைப்பட்டது. வெள்ளியங்கிரி மலை மீது ஏறியவன், அதன் உச்சியிலே வந்தமர்ந்தான். இங்கு அவன் ஆனந்தத்தில் அமரவில்லை, தியானத்தில் அமரவில்லை, ஒருவித கோபத்திலும் மனச்சோர்விலும் வந்தமர்ந்தான். இங்கு கணிசமான நேரத்தை அவன் செலவிட்டான். எங்கெல்லாம் சிவன் அமர்ந்தானோ அவ்விடத்தை எல்லாம் மக்கள் கைலாயம் என அழைத்தனர். அதனாலேயே, வெள்ளியங்கிரியை மக்கள் தென் கைலாயம் என அழைக்கத் துவங்கினர். இந்த மலையடிவாரத்தில் ஈஷா யோக மையம் அமைந்திருப்பது நமது பாக்கியம்.

ஏழுமலை என்று எதனால் சொல்கிறார்கள்?


இதில் ஏழு மலைகள் உள்ளதாய் சொல்வார்கள். மலையேற்றம் செய்யும்போது, ஏழு ஏற்ற - இறக்கங்கள் இருப்பதனால், மலையேற்றம் செய்பவருக்கு ஏழு மலைகள் ஏறியதைப் போன்ற அனுபவம் ஏற்பட்டுவிடுகிறது. இதனால் ஏழுமலை என்றார்கள். மலையில் சூறைக்காற்று விடாமல் வீசுவதால் இங்கு புற்களைத் தவிர வேறொன்றும் வளர்வதில்லை. பிரம்மாண்டமான மூன்று பாறைகள் கூடி ஒரு லிங்கத்திற்கு ஆலயமாய் மாறி நிற்கிறது. மிகச் சக்திவாய்ந்த ஓரிடம் அது.

இது மலையல்ல, ஆலயம்:


அற்புதமான பல உயிர்கள், கடவுளும் பொறாமை கொள்ளக்கூடிய வகையில் வாழ்ந்தவர்கள், அத்தனை மாண்புடன் அருளுடன் இங்கு வாழ்ந்தவர்கள் இம்மலைகளில் தன் பாதங்களைப் பதித்திருக்கின்றனர். தாங்கள் அறிந்தவற்றை எல்லாம் இம்மலைகள் உள்வாங்கிக்கொள்ளும் வண்ணம் செயல் புரிந்திருக்கின்றனர். அவர்களது ஞானம் தொலைந்து போகாமல் இருக்குமே! இந்த மலையில் என் குரு தனது பாதங்களைப் பதித்திருக்கிறார். தன் உடலினையும் நீப்பதற்கு இம்மலைகளையே தேர்வு செய்தார். அதனால், எனக்கும் இங்குள்ள பிறருக்கும், இது வெறும் மலையல்ல, ஆலயம். நிறைய உன்னதங்களை உள்ளடக்கியதாக இந்த மலை உள்ளது. தியானலிங்கத்தை பிரதிஷ்டை செய்யக்கூடிய வழிமுறை எனக்கு இங்கிருந்து நிரம்பக் கிடைத்தது.

வெள்ளியங்கிரி மலையேற்றம் - ஏழு மலைகள்... என்னென்ன சிறப்புகள்?


'தென்னாடுடைய சிவனே போற்றி!' என்று போற்றப்படும் சிவனுக்கு, தென்னாட்டில் உள்ள கயிலைதான், 'தென் கயிலை' என்று அழைக்கப்படும் வெள்ளியங்கிரி மலை!

இயற்கையின் பேருருவில் இறைவனைக் காணுகிற மரபு நம்முடையது. வெள்ளியங்கிரியின் ஏழாவது மலையில் இருக்கும் சிவலிங்கம் இயற்கையாக எழுந்த சுயம்புலிங்கம். ஞானிகளும் சித்தர்களும், ஸ்தூல வடிவிலும் சூட்சுமவடிவிலும் நடமாடுகிற புனிதமிக்க மலை வெள்ளியங்கிரி. இதில் பயணம்செய்வது பரமனைப் படிப்படியாய் நெருங்குவதற்குச் சமம்!

ஏழு மலைகளைக்கொண்டது வெள்ளியங்கிரி. இறைவனை நேசிப்பவர்களும் இயற்கையை நேசிப்பவர்களும் இதயம் கரைந்து ஈடுபடுகிற மலை, வெள்ளியங்கிரி. இந்த ஏழு மலைகளும் மனித உடலில் சூட்சுமமாக உள்ள ஏழுசக்கரங்களின் குறியீடு. பங்குனி, சித்திரை மாதங்களில் சிவகோஷம் எழுப்பிய வண்ணம் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக மலையேறி வழிபடுவது வழக்கம். ஆண்டு முழுவதும் மலையேற வருகிற பக்தர்களும் உண்டு.

முதல் மலை:


முன்பெல்லாம் கைகால்களால் தவழ்ந்து ஏறி வந்த இந்த மலையில் இப்போது படிக்கட்டுகள் வந்துவிட்டன. முதல் மலை செங்குத்தான பாதைகொண்டது. ஏறுவதற்குச் சிரமப்பட வேண்டிவரும். இந்த மலைப் பாதையின் ஆரம்பத்தை ஆன்மிகப் பாதையின் ஆரம்பத்துக்கு நாம் ஒப்பிடலாம். ஆன்மிகப் பயிற்சிகளைப் பின்பற்றுவது எப்படி ஆரம்பத்தில் சற்று சிரமமாக இருக்குமோ, அது போல முதல் மலை ஏறுவது சற்றே சிரமமாக இருக்கும். முதல் மலையைத் தாண்டி வருபவர்களை வரவேற்க, விநாயகப்பெருமான் காத்திருக்கிறார்.

இரண்டாவது மலை:


பயணம் பழகிவிட, சுனையில் நீர் குடித்து இரண்டாவது மலையில் உற்சாகமாக நடையிடும்போது, அதன் எல்லையாக நிமிர்ந்து நிற்கிறது வழுக்குப் பாறை ஒன்று. இந்தப் பாறையில் ஏறும்போது புதுமையாய் இருக்கிறது. வழுக்குப் பாறை வந்தவுடனேயே இரண்டாவது மலை முடிந்துவிட்டதை பக்தர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

மூன்றாவது மலை:


மூன்றாவது மலையும் ஒரு சுனையோடு துவங்குகிறது. இதற்கு 'கைதட்டிச்சுனை' என்று பெயர். இந்தச் சுனை இருக்கும் பகுதிகளில் சித்தர்கள் நடமாட்டம் மிகுதி என்பதால், இங்கே நின்று கை தட்டினால் பாறைகளின் இடுக்கிலிருந்து தண்ணீர் வரும் என்ற ஒரு நம்பிக்கை. இதனாலேயே கை தட்டிச் சுனை என்ற பெயர்.

மூன்றாவது மலை முடிவடைவது இன்னொரு சுனையில். இதற்கு 'பாம்பாட்டிச்சுனை' என்று பெயர். பாம்பாட்டிச் சித்தர் என்று சொன்ன மாத்திரத்தில் நம் நினைவுக்கு வருவதென்னவோ, மருதமலைதான். அந்தப் பாம்பாட்டிச் சித்தர் இந்த இடத்திலேயும் வசித்திருக்கக்கூடும். குண்டலினி சக்தியின் குறியீடாக பாம்பு இருப்பதையும் நாம் நினைவுகொள்ள வேண்டும். மனிதர்களின் குண்டலினி ஆற்றலை ஆட்டுவிக்கிற வல்லமை சித்தர்களுக்கு இருப்பதாலேயே பாம்பாட்டிச் சித்தர் என்பது ஒரு முக்கியமான சொல்லாக விளங்குகிறது.

நான்காவது மலை:


நான்காவது மலை, சமதளத்தில் இருக்கிறது. நடந்து போக எளிதாகவும் பக்தர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பாகவும் இந்த மலை விளங்குகிறது. இது மண் மலையாக இருக்கிறது. ஒருபுறம் அடர்ந்த வனமாகவும், மறுபுறம் பாதாளமாகவும் அமைந்திருக்கிறது. இந்த நான்காம் மலையில்தான் ஒட்டர் என்கிற சித்தர் சமாதி அடைந்திருக்கிறார். எனவே, 'ஒட்டர் சமாதி' என்கிற பெயர் வெள்ளியங்கிரி பக்தர்களுக்கு நன்கு அறிமுகமான பெயர்.

ஐந்தாவது மலை:


ஐந்தாம் மலைக்கு 'பீமன் களியுருண்டை மலை' என்று பெயர் உண்டு. பஞ்ச பாண்டவர்கள் தாராபுரத்தில் தங்கி இருந்ததாகவும் அப்போது வெள்ளியங்கிரிக்கு வந்ததாகவும் நம்பப்படுகிறது. எனவே, பீமன் களியுருண்டை மலை, அர்ச்சுனன் தவம் செய்த இடமாகக் கருதப்படும் 'அர்ச்சுனன் தலைப் பாறை' போன்ற இடங்களெல்லாம் இங்கே உண்டு.ஐந்தாம், ஆறாம் மலைகள் ஏற்ற இறக்கம் நிரம்பியதாய், ஒன்றோடொன்று நெருக்கமாய் அமைந்திருக்கின்றன. இந்த இரண்டு மலைகளுக்கு நடுவில் சேத்திழைக் குகை உள்ளது. இந்தக் குகையில் ஒரே நேரத்தில் 60 - 70 பேர் வரை தங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறாவது மலை:


ஆறாவது மலை, கீழ் நோக்கி இறங்கக்கூடியது. இங்கே பாயக்கூடிய சுனை 'ஆண்டிசுனை'. இது நீலி ஆற்றில் சேர்கிறது. இங்கே குளிப்பது மறக்க முடியாத, சுகமான அனுபவம் என்கின்றனர் பக்தர்கள். ஐந்தாவது மற்றும் ஆறாவது மலைகள், வெள்ளை மணல் கொண்டவை. எனவே, இவற்றுக்கு 'திருநீற்றுமலை' என்றும் பெயர் உண்டு. இந்தத் திருநீற்று மலையிலிருந்து வெள்ளை மணலை இறைவனுடைய திருநீறாகவே போற்றி வீடுகளுக்குக் கொண்டு செல்வது பக்தர்களின் வழக்கம்.

ஏழாவது மலை:


'சுவாமி முடி மலை' என்று பெயர்கொண்ட ஏழாவது மலை மேல் ஏறுவது, முதல் மலையில் ஏறியபோது இருந்த அதே அளவு சிரமமும் சவாலுமானது. இதில், பெரும் பாறைகள் மூன்றும் சேர்ந்து இயற்கையாகவே தோரணம்போல் அமைந்திருக்கும் அரிய காட்சி கண்களுக்கு விருந்தாகிறது. இதைத் 'தோரண வாயில்' என்று அழைக்கிறார்கள். ஏழாவது மலையில் இருக்கிற சுயம்புலிங்கம் அனைவராலும் வழிபடப்படுகிற வெள்ளியங்கிரி ஈசன்.

மலையேறி வந்த களைப்பும் நாம்தானா ஏறி வந்தது என்கிற மலைப்பும் பறந்து போகும்விதமாய் அடர்ந்த வனங்களின் மடியில் உயர்ந்த மலைகளின் நடுவில் யுகம்யுகமாய் கோயில்கொண்டு இருக்கிறார் வெள்ளியங்கிரி ஈசர்.

கரிகால சோழனிடம் சமய முதலிகள் 'வெள்ளியங்கிரிச் சாரலில் பிறந்தாலும், இருந்தாலும், இறந்தாலும் முக்தியே கிடைக்கும்!' என்று தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. வெள்ளியங்கிரியின் எந்தவொரு மலையையோ, லிங்கத்தையோ வழிபட்டாலும், அவர்கள் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய பலன்களைப் பெறுவார்கள் என்று தெய்வீக நூல்கள் தெரிவிக்கின்றன.






      Dinamalar
      Follow us