
குறைத்து மதிப்பிடுவதே வேலை!
'அவர்களை தவிர வேறு யாருக்கும் எந்த விஷயமும் தெரியாதா; அவர்கள் மட்டும் தான்புத்திசாலிகளா...' என, பா.ஜ.,வினரை நோக்கி பாய்கின்றனர், காங்கிரஸ் கட்சியினர். சமீபத்தில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில்,காங்கிரஸ் 99 தொகுதிகளில் வெற்றி பெற்றதால், அந்த கட்சிக்கு லோக்சபாவில் எதிர்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது; இதனால், லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவி ராகுலுக்கு கிடைத்தது. மீண்டும் 10 ஆண்டுகளுக்கு பின், இந்த அந்தஸ்து கிடைத்திருப்பதால், உற்சாகம் அடைந்துள்ளார் ராகுல். இதனால், சபையில் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மத்திய அரசையும், அதன் கொள்கைகளையும் கடுமையாக விமர்சிக்கிறார்.
சமீபத்தில் பேசிய ராகுல், பட்ஜெட்டில் உள்ள அம்சங்கள் ஏழைகளையும், நடுத்தர மக்களையும் வதைக்கும் வகையில் உள்ளதாக குற்றம் சாட்டினார். இதற்கு உதாரணமாக, மஹாபாரதத்தில் வரும்சக்கர வியூகத்தை குறித்து பேசி, அதேபோன்ற வியூகத்தில் தற்போது மக்கள் சிக்கியுள்ளதாக
பேசினார். இதை காங்கிரஸ் கட்சியினர் ஆரவாரமாக கைதட்டி வரவேற்றனர். 'யாரோ எழுதி கொடுத்ததை சபையில் ராகுல் படிக்கிறார். இவருக்கு சக்கர வியூகம் குறித்து என்ன தெரியும்...?' என கிண்டலடித்தனர், பா.ஜ.,வினர்.காங்கிரஸ் கட்சியினரோ, 'ஏன், ராகுல் மஹாபாரதம் படித்திருக்க மாட்டாரா; அவரை குறைத்து மதிப்பிடுவதே இவர்களுக்கு பொழுதுபோக்காக ஆகி விட்டது...' என, சீறுகின்றனர்.