PUBLISHED ON : ஆக 18, 2024 12:00 AM

'தன் பதவிக்காலம், ஒரு சாதனைக் காலமாக இருக்க வேண்டும் என நினைக்கிறார் போலும்...' என, மஹாராஷ்டிரா முதல்வரும், சிவசேனா
தலைவருமான ஏக்நாத் ஷிண்டே பற்றி கூறுகின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.மஹாராஷ்டிராவில் விரைவில் சட்டசபை
தேர்தல் நடக்கவுள்ளது. இன்னும் சில மாதங்கள் தான் முதல்வர் பதவியில் இருக்கப் போகிறார், ஏக்நாத் ஷிண்டே.சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில், இவரது தலைமையிலான சிவசேனா பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. எதிர்க்கட்சி கூட்டணி தான் கணிசமான தொகுதி களில் வெற்றி பெற்றது. இதனால், சட்டசபை
தேர்தலில் வெற்றி சாத்தியமா என்ற சந்தேகம் ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஏற்பட்டு விட்டது.இதையடுத்து, தான் முதல்வராக இருந்த காலத்தை, யாராலும் மறக்க முடியாத காலமாக அனைவரது மனதிலும் இடம்பிடிக்கச் செய்ய
வேண்டும் என நினைக்கிறார், ஷிண்டே. இதற்காக, தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே, டி.ஜி.பி., தலைமைச் செயலர், வனத்துறை தலைவர் ஆகிய பதவிகளில் பெண்களை
நியமித்துள்ளார். இதன் வாயிலாக, மஹாராஷ்டிராவின் டி.ஜி.பி.,தலைமைச் செயலர், வனத்துறை தலைவர் ஆகிய பதவிகளில் முதல் முறையாக பெண்களை நியமித்த முதல்வர் என்ற பெயர், ஏக்நாத் ஷிண்டேவுக்கு கிடைத்துள்ளது.
'அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அவருக்கே இல்லை. இதனால் தான், சாதனை என்ற பெயரில் எதை எதையோ செய்து வருகிறார்...' என கிண்டல் அடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.