PUBLISHED ON : மே 24, 2024 12:00 AM

'ஆளுங்கட்சியை எதிர்த்து கடுமையாக பிரசாரம் செய்வார் என்று பார்த்தால், இப்படி பழைய கதைகளை பேசுகிறாரே...' என, காங்கிரஸ் பொதுச் செயலர் பிரியங்காவை பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
பிரியங்காவின் சகோதரர் ராகுல், லோக்சபா தேர்தலில், கேரள மாநிலம், வயநாடு தொகுதியில் போட்டியிட்டார். இங்கு தேர்தல் நடந்து முடிந்த பின், உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியிலும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.
இங்கும் சமீபத்தில் தேர்தல் நடந்து முடிந்து விட்டது. முன்னதாக, தன் சகோதரர் ராகுலுக்காக ரேபரேலி தொகுதி முழுதும் சுற்றி சுற்றி வந்து பிரசாரம் செய்தார், பிரியங்கா. அப்போது, ராகுலுக்கும், தனக்கும் இடையிலான குழந்தை பருவ நினைவுகள் குறித்த மனம் திறந்து பேசினார்.
'நாங்கள் இருவரும் குழந்தைகளாக இருந்தபோது, அடிக்கடி சண்டையிட்டு கொள்வோம். ஒரு பொருளுக்காக இருவரும் அடித்துக் கொள்வோம். ஆனால், இந்த மோதல் தான், பின்னாளில் மிகப் பெரிய பாசப் பிணைப்பாக உருவெடுத்தது...' என நெகிழ்ச்சியாக பேசினார், பிரியங்கா.
இதைக்கேட்ட வாக்காளர்கள், 'அரசியல் ரீதியாக பேசி, ஓட்டு கேட்பார் என நினைத்தோம். ஆனால், குடும்பம், பாசம், மோதல், சண்டை என உருக்கமாக பேசி ஓட்டு கேட்கிறாரே. இந்த, 'சென்டிமென்ட்' தேர்தலில் கை கொடுக்குமா என பார்ப்போம்...' என, எதிர்பார்ப்புடன் கூறுகின்றனர்.