PUBLISHED ON : ஏப் 24, 2024 12:00 AM

'சினிமாவை விட, அரசியல் களத்தில் தான் அதிக விறுவிறுப்பான காட்சிகள் இடம் பெறுகின்றன...' என்கின்றனர், கர்நாடகாவில் உள்ள அரசியல்வாதிகள்.
இங்கு முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் ஒரு அணியாகவும், பா.ஜ., மற்றும் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம், மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன.
முன்னாள் பிரதமரான தேவகவுடாவுக்கு, 91 வயதாகிறது. 'அரசியல் வேண்டாம்; ஓய்வெடுங்கள்...' என, அவரது வயதும், உடல்நிலையும் எச்சரித்தாலும், அவரது மனது, அரசியலை விடுவதாக இல்லை.
இங்குள்ள ஹாசன் மாவட்டத்தில் தேவகவுடாவின் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ளது. 30 ஆண்டுகளாக இந்த தொகுதியில் தேவகவுடா குடும்பத்தினர் தான் அதிகம் வெற்றி பெறுகின்றனர்.
இடையில், 1999ல் நடந்த தேர்தலில் மட்டும் தேவகவுடாவை, அவரது அரசியல் எதிரியான காங்கிரசின் புட்டசாமி கவுடா தோற்கடித்தார். இப்போது புட்டசாமி உயிருடன் இல்லா விட்டாலும், இவரது குடும்பத்தினருக்கு செல்வாக்கு உள்ளது.
தற்போது நடக்கும் தேர்தலில் ஹாசன் தொகுதியில், தற்போதைய எம்.பி.,யான தன் பேரன் பிரஜ்வல் ரேவண்ணாவையே மீண்டும் நிறுத்தியுள்ளார் தேவகவுடா. ஆளுங்கட்சியான காங்கிரஸ், புட்டசாமி கவுடாவின் பேரன் ஷ்ரேயஸ் படேலை வேட்பாளராக நிறுத்தி உள்ளது.
தாத்தாக்கள் மோதிய களத்தில் இன்று பேரன்கள் மோதுவதால், ஹாசன் தொகுதியில் பிரசாரம் அனல் பறக்கிறது. 'தலைமுறை தாண்டியும் அரசியல் பகை தொடர்வது ஆச்சரியமான விஷயம் தான்...' என்கின்றனர், இங்குள்ள அரசியல்வாதிகள்.

