PUBLISHED ON : பிப் 22, 2025 12:00 AM

'முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் தற்போது ஒன்பதாவது முறையாக பீஹாரில் முதல்வராக இருப்பவர்... இவரைப் பார்த்து இப்படி கூறுகின்றனரே...' என, நிதிஷ் குமார் குறித்து, அவருக்கு நெருக்கமானவர்கள் புலம்புகின்றனர்.
பீஹாரில் காங்., - ராஷ்ட்ரீய ஜனதா தளம் - பா.ஜ., என கூட்டணியை அடிக்கடி மாற்றினாலும், முதல்வர் நாற்காலியை மட்டும் நிதிஷ் குமார் யாரிடமும் விட்டுக் கொடுத்ததே இல்லை. இதனால், எதிர்க்கட்சிகளால் கடுமையாக விமர்சிக்கப்பட்டாலும், அதை கண்டுகொள்ளவும் மாட்டார்.
தற்போது பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. கடந்த சட்டசபை தேர்தலில், அதிக இடங்களில் பா.ஜ., வெற்றி பெற்ற போதிலும், ஆட்சியை பெருந்தன்மையுடன் நிதிஷ் குமாருக்கு, பா.ஜ.,வினர் விட்டுக் கொடுத்தனர்.
தற்போது கூட்டணியில் இருந்தபடியே நிதிஷ் குமாரை, பா.ஜ.,வினர் விமர்சித்து வருகின்றனர்... 'அவரால் சரியாக பேச முடியாது; அவர் பேச ஒன்று நினைத்தால், வார்த்தை வேறு ஒன்றாக வெளி வரும்; அவர் முகத்தில் ஏதோ ஒரு நோய் உள்ளது. அதனால் தான், எப்போதும் வாயை அசைத்தபடியே உள்ளார்' என, கிண்டலாக கூறுகின்றனர்.
இதை மறுக்கும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர், 'இப்போது வேண்டுமானால், அவருக்கு ஏதாவது நோய் வந்திருக்கலாம். ஆனால், சிங்கம் என்றைக்கும் சிங்கம் தான்' என்கின்றனர்.