PUBLISHED ON : ஜூலை 04, 2024 12:00 AM

'எத்தனை முறை சூடு பட்டாலும் இவர் திருந்த மாட்டார் போலிருக்கிறது...' என, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரை பற்றி எரிச்சலுடன் பேசுகின்றனர், மஹாராஷ்டிராவில் உள்ள அரசியல்வாதிகள்.
அஜித் பவார், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவனரான சரத் பவாரின் மூத்த சகோதரர் மகன். உறவினர் என்பதால், கட்சியில் தனக்கு அடுத்தபடியாக அஜித் பவாருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தார், சரத் பவார்.
வளர்த்த கடா மார்பில் பாய்ந்த கதையாக, அடிக்கடி சரத் பவாருக்கு துரோகம் செய்து விட்டு, பதவி ஆசையில் எதிர் முகாமுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார், அஜித் பவார்.
இப்படித் தான், கடந்தாண்டு கட்சியை இரண்டாக உடைத்து, பெரும்பாலான கட்சி நிர்வாகிகளை தன் பக்கம் இழுத்து, பா.ஜ., -- சிவசேனா கூட்டணி அரசியலில் ஐக்கியமானார், அஜித் பவார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயரும், சின்னமும் இவரிடமே வந்தது. துணை முதல்வர் பதவியும் கிடைத்தது. ஆனால், சமீபத்தில் நடந்த லோக்சபா தேர்தலில் இவரது கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
மத்திய அரசில், கேபினட் அந்தஸ்துள்ள அமைச்சர் பதவியை அஜித் பவார் தரப்பு கேட்க, அதற்கு பா.ஜ., மேலிடம் மறுத்து விட்டது. 'விருப்பம் இருந்தால் கூட்டணியில் இருக்கலாம்; இல்லையெனில் கிளம்பலாம்...' என, கூறி விட்டது.
இதனால், 'இந்த கூட்டணியிலேயே தொடர்வதா அல்லது சரத் பவார் காலில் விழுந்து, மீண்டும் அவரிடமே அடைக்கலம் ஆவதா' என தீவிரமாக யோசித்து வருகிறார், அஜித் பவார்.