PUBLISHED ON : செப் 03, 2024 12:00 AM

'அரசியல் கட்சிகள் இப்படி செயல்பட்டால், ஒலிம்பிக் போட்டியில் எப்படி நம் நாடு தங்கம் வாங்கும்...' என புலம்புகின்றனர், விளையாட்டு வீரர்கள்.
கடந்த, 2004ல் ஏதென்சில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கி சுடுதலில் வெள்ளி பதக்கம் வென்றவர், ராஜ்யவர்தன் சிங் ரதோர். அந்த போட்டிக்கு பின், பா.ஜ.,வில் சேர்க்கப்பட்ட அவர், மோடி தலைமையிலான முந்தைய அரசில் மத்திய அமைச்சராகி, முழு நேர அரசியல்வாதியாகி விட்டார்; தற்போது, ராஜஸ்தான் மாநில அமைச்சராக உள்ளார்.
சமீபத்தில், ஐரோப்பிய நாடான பிரான்சின் பாரிசில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், துப்பாக்கி சுடுதலில் இரண்டு பதக்கங்களை வென்ற மனு பாகர் மீது, அரசியல் கட்சிகளின் பார்வை திரும்பியுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று திரும்பிய அவர், டில்லியில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவை சந்தித்தார். அப்போது அவரிடம், காங்கிரசில் சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டதாக கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
ஆனால், மனு பாகர் எந்த பதிலும் கூறாமல் திரும்பி விட்டார்; ஆனாலும், ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அவரை, அந்த மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு பிரசாரம் செய்ய வைக்க தொடர்ந்து முயற்சி நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதைக் கேள்விப்பட்ட விளையாட்டு ஆர்வலர்கள், 'மனு பாகருக்கு, 22 வயது தான் ஆகிறது. அடுத்தடுத்த சர்வதேச போட்டிகளில் சாதிக்கும் வாய்ப்பு உள்ளது.
'ஆனால், அரசியல் ஆசை காட்டி அவரை, கட்சிகள் தங்கள் வலைக்குள் இழுப்பது கவலை அளிக்கிறது...' என்கின்றனர்.