PUBLISHED ON : மார் 25, 2024 12:00 AM

'இவரது நிலைமை இப்படி ஆகி விட்டதே...' என, தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவைப் பார்த்து பரிதாபப்படுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
இங்கு, முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. தேசிய அரசியலுக்கு ஆசைப்பட்டு, தன் கட்சியின் பெயரை, பாரத் ராஷ்ட்ர சமிதி என, எப்போது மாற்றினாரோ, அப்போதிலிருந்து சந்திரசேகர ராவுக்கு நேரமே சரியில்லை.
கடந்த சட்டசபை தேர்தலில் ஏற்பட்ட படுதோல்வியிலிருந்து அவர் இன்னும் மீளவில்லை. அதற்குள் லோக்சபா தேர்தல் வந்து விட்டது.
வேட்பாளர்களை தேடி பிடிப்பதே, தற்போது அவருக்கு பெரிய வேலையாக உள்ளது. இவரது கட்சியை சேர்ந்த ஒன்பது, 'சிட்டிங்' எம்.பி.,க்களில், மூன்று பேர், இப்போது, பா.ஜ., மற்றும் காங்., சார்பில் போட்டியிடுகின்றனர். கட்சியின் மூத்த நிர்வாகிகளும் தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டுகின்றனர்.
முந்தைய, சந்திரசேகர ராவ் ஆட்சி மீதான கோபம், இன்னும் மக்களிடம் இருப்பதால், தேர்தலில் போட்டியிடுவது சரியாக இருக்காது என, ஒதுங்குகின்றனர்.
பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் எம்.எல்.ஏ.,க்களில் பலர், லோக்சபா தேர்தல் முடிந்ததும் காங்கிரசில் சேரப் போவதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.
இதனால், வேட்பாளர்களை தேடுவதா அல்லது இருக்கும் நிர்வாகிகளை வேறு கட்சிகளுக்கு ஓட விடாமல் தக்க வைப்பதா என தெரியாமல் தவிக்கிறார், சந்திரசேகர ராவ்.

