PUBLISHED ON : மார் 27, 2024 12:00 AM

'அட; இது வித்தியாசமான ஐடியாவாக இருக்கிறதே...' என, மத்திய வீட்டு வசதித்துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கவுஷல் கிஷோர் பற்றி ஆச்சரியப்படுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கும் உத்தர பிரதேச மாநிலத்தின் மோகன்லால்கன்ச் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக இருப்பவர் தான், இந்த கவுஷல் கிஷோர்.
இப்படி ஒரு மத்திய அமைச்சர் உள்ளார் என்பது, பா.ஜ.,வில் உள்ள பலருக்கே தெரியாது; அந்த அளவுக்கு அமைதியான குணம் உடையவர்.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருவதற்கு முன், இவர் ஒரு வித்தியாசமான திட்டத்தை செயல்படுத்தினார். தொகுதியில் உள்ள ஒவ்வொரு வாக்காளர்களிடமும், தலா 1 ரூபாய் வசூலிப்பது என்பது தான், அந்த திட்டம்.
வசூலாகும் தொகையை, தொகுதிக்கான நல திட்டங்களுக்கு செலவழிக்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார்.
'இது என்ன 1 ரூபாய் வசூல் திட்டம்...' என, அவரிடம் கேட்டபோது, 'தொகுதி மக்களுக்கும், நமக்கும் ஒரு பிணைப்பை ஏற்படுத்துவதற்காகவே இந்த திட்டம். நானே ஒவ்வொரு வீட்டுக்கும் சென்று, இதை வசூலித்து வருகிறேன்.
'ஓட்டு போடும் போது, என் முகம், வாக்காளர்களுக்கு நினைவுக்கு வர வேண்டும். அதற்காகத் தான் இந்த திட்டம்...' என, விளக்கம் அளித்தார்.
சக அரசியல்வாதிகளோ, 'இவர் கொஞ்சம் மாற்றி யோசிக்கிறார். திட்டம், 'ஒர்க் அவுட்' ஆகுமா என பொறுத்திருந்து பார்ப்போம்...' என்கின்றனர்.

