PUBLISHED ON : செப் 18, 2024 12:00 AM

'இதெல்லாம் ரொம்ப ஓவராக இருக்கிறது...' என வருத்தப்படுகின்றனர், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த போலீஸ் உயரதிகாரிகள்.
இங்கு, முதல்வர் சந்திரபாபு நாயுடுதலைமையிலான தெலுங்கு தேசம் ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி நடந்தது.
அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த சந்திரபாபு நாயுடு மீது பல்வேறுவழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஊழல் வழக்கில் அவர் கைதுசெய்யப்பட்டு, சிறையிலும்அடைக்கப்பட்டார். அதேபோல், மாநிலம் முழுதும் தெலுங்கு தேசம் கட்சி நிர்வாகிகள் மீதும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், தங்களை கைது செய்த போலீஸ் அதிகாரிகள் பட்டியலை தயார் செய்து, வரிசையாக அவர்கள் மீது, ஏதோ ஒரு காரணத்தை கூறி, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து வருகிறார், சந்திரபாபு நாயுடு.
ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், உளவுத்துறை தலைவராக இருந்த அதிகாரி உட்பட மூன்று ஐ.பி.எஸ்., அதிகாரிகள் சமீபத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். பாலிவுட் நடிகைக்கு தொல்லை கொடுத்ததாக இவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையறிந்த மற்ற போலீஸ் அதிகாரிகள், 'அரசியல்வாதிகள், தங்கள் சுயநலனுக்காக சில விஷயங்களை செய்கின்றனர். அதற்கு எங்களை கருவியாக பயன்படுத்துகின்றனர். இதை தவிர்க்க முடியாது.
'அதற்காக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும், எங்களை பழிவாங்குவது எந்த விதத்தில் நியாயம்; இதை கேட்க நாதியில்லையா...' என, புலம்புகின்றனர்.

