PUBLISHED ON : மே 25, 2024 12:00 AM

'இப்போது வருத்தப்பட்டு என்ன பயன்; தேர்தலுக்கு முன்பே யோசித்திருந்திருக்கலாம்...' என மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி பற்றி பேசுகின்றனர், அங்குள்ள காங்., கட்சியினர்.
லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை வீழ்த்துவதற்காக காங்கிரஸ், தி.மு.க., ராஷ்ட்ரீய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இணைந்து, 'இண்டியா' என்ற பெயரில் கூட்டணி அமைத்தன.
இந்த கூட்டணி அமைவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், மம்தா பானர்ஜி. ஆனால், மேற்கு வங்கத்தில் தொகுதி ஒதுக்கீடு விஷயத்தில் காங்கிரசுக்கும், அவருக்கும் மோதல் ஏற்பட்டதால், தனித்து போட்டியிடுவதாக அறிவித்தார்.
மேற்கு வங்கத்தில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. ஐந்து கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், திரிணமுல் காங்கிரசுக்கு பா.ஜ., பலத்த போட்டியை ஏற்படுத்தி வருகிறது.
மத்தியில் ஆளுங்கட்சியாக இருப்பதால், முழு பலத்தையும் பயன்படுத்தி, திரிணமுல் காங்கிரசை வீழ்த்துவதற்கு வியூகம் வகுத்து வருகிறது.
இதை சமாளிக்க முடியாமல் திணறும் மம்தா, 'தேர்தலுக்கு பின், 'இண்டியா' கூட்டணி ஆட்சி அமைத்தால், திரிணமுல் காங்கிரஸ் வெளியில் இருந்து ஆதரவு தரும்...' என, சமீபத்தில் அறிவித்தார்.
இதைக் கேட்ட மேற்கு வங்க காங்., நிர்வாகிகள், 'கூட்டணி கட்சிகளை மதிக்காமல், அகம்பாவத்துடன் செயல்பட்ட மம்தாவுக்கு, இப்போது தான் புத்தி வந்துள்ளது. ஆனால், இது காலம் கடந்த ஞானோதயம்...' என, கிண்டல் அடிக்கின்றனர்.

