PUBLISHED ON : செப் 04, 2024 12:00 AM

'யாருக்கு எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதை சொல்லவே முடியாது...' என முணுமுணுக்கின்றனர், பஞ்சாபில் உள்ள காங்கிரஸ் கட்சியினர்.
இங்கு முதல்வர் பகவந்த் சிங் மான் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இதற்கு முன், அங்கு காங்கிரஸ் ஆட்சி நடந்தது. அந்த கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக இருந்த அமரீந்தர் சிங், சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பா.ஜ.,வில் இணைந்தார்.
இதையடுத்து, அதிகம்அறிமுகம் இல்லாத சரன்ஜித் சிங் சன்னி என்பவரை முதல்வராக நியமித்தது காங்., மேலிடம். ஆனால், 2022ல் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது.
இந்த தோல்விக்கு முன்னாள் கிரிக்கெட் வீரரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான நவ்ஜோத் சிங் சித்துவின்உள்ளடி அரசியலே காரணம் என கூறப்பட்டது. தோல்விக்கு பின், தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்தார், சரன்ஜித் சிங்.
கட்சி கூட்டங்கள் எதிலும் பங்கேற்காமல் தவிர்த்து வந்தார். ஆனாலும், மே மாதம் நடந்த லோக்சபா தேர்தலில், ஜலந்தர் தொகுதியில் போட்டியிடுவதற்கு அவருக்கு கட்சி மேலிடம் வாய்ப்பு அளித்தது; அவரும் வெற்றி பெற்று எம்.பி.,யாகி விட்டார்.
இதைத் தொடர்ந்து, அடுத்த சட்டசபை தேர்தலில்,அவரை காங்கிரசின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் முயற்சியும் நடந்து வருகிறது.
இதைக் கேள்விப்பட்ட பஞ்சாபில் உள்ள காங்., மூத்த நிர்வாகிகள், 'கட்சியில் எந்த வேலையும் பார்க்காமல் ஒதுங்கி இருப்பவர்களுக்கு தான் மாலையும், மரியாதையும் கிடைக்கிறது...' என, புலம்புகின்றனர்.