PUBLISHED ON : ஆக 30, 2024 12:00 AM

'நம்பிக்கையானவர்கள் கூட, நேரம் காலம் பார்த்து சரியாக பழி வாங்குகின்றனர்...' எனகவலைப்படுகிறார், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.
கோல்கட்டாவில் அரசு மருத்துவமனையில் பயிற்சி பெற்று வந்த பெண் டாக்டர், சமீபத்தில் ஒரு காமக்கொடூரனால் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவத்தால், மேற்கு வங்க மாநிலத்தில் கொந்தளிப்பான சூழல் நிலவுகிறது. மாநிலம் முழுதும் மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து உள்ளது. எதிர்க்கட்சியினர் போராட்டங்களை நடத்தி கிடுகிடுக்க வைக்கின்றனர்; நீதிமன்றங்களும் மாநில அரசை கடுமையாக விமர்சித்துள்ளன.
இதனால் கடும் நெருக்கடியில் உள்ளார், மம்தா பானர்ஜி. இந்த விவகாரத்தில், அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டிய கட்சி நிர்வாகிகள் கூட மவுனம் காக்கின்றனர்.
அதிலும், மம்தாவின் மருமகனும், கட்சியின் பொதுச்செயலருமான அபிஷேக் பானர்ஜியும், இந்த விவகாரத்தில் மம்தா மீது கடும் அதிருப்தியில் உள்ளார். இதுவரை இந்த விஷயத்தில் அவர், வாய் திறந்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்துள்ள மம்தா பானர்ஜி, 'எல்லாரும் சேர்ந்து, என்னை பெண்களுக்கு எதிரானவர் போல் சித்தரிக்கின்றனர். எனக்கு நெருக்கமானவர்கள் கூட, இந்த விஷயத்தில் எனக்கு ஆதரவாக நிற்காமல் விலகி செல்கின்றனர்; எல்லாம், காலம் செய்த கோலம்...' என, புலம்புகிறார்.