PUBLISHED ON : ஏப் 08, 2024 12:00 AM

'அரசியலில் எப்போதும் இப்படித் தான்; கொஞ்சம் பின்னடைவை சந்தித்தாலும், சுற்றியிருக்கும் ஜால்ரா கோஷ்டி காணாமல் போய் விடும்...' என்கின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.
இங்கு, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டில்லி மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா உள்ளிட்ட டில்லியின் பெரும்பாலான அமைச்சர்கள் தற்போது சிறையில் தான் உள்ளனர். இதனால், தேர்தல் நேரத்தில் கட்சியை வழிநடத்த தலைவர் இல்லாமல், ஆம் ஆத்மி தொண்டர்கள் தவிக்கின்றனர்.
இந்த நேரத்தில் தான், மற்றொரு அமைச்சரான ஆதிஷி சிங் மீது புகழ் வெளிச்சம் விழத் துவங்கியுள்ளது. சிறையில் உள்ளவர்கள் வகித்த இலாகாக்கள் இப்போது ஆதிஷி வசம் தான் உள்ளன.
ஊடகங்களுக்கு பேட்டி கொடுப்பது, போராட்டத்துக்கு தலைமை வகிப்பது என, ஆதிஷி தீவிரமாக செயல்படத் துவங்கியுள்ளார். இதையடுத்து, ஆம் ஆத்மியின் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதிஷிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர்.
'கெஜ்ரிவால் சிறையில் இருப்பதால், ஆதிஷிக்கு முதல்வர் பதவியை கொடுக்கலாம்; தற்காலிகமாக அவரை கட்சியின் தலைவராக நியமிக்கலாம்...' என, ஆதிஷிக்கு அவர்கள் ஜால்ரா அடிக்கின்றனர்.
டில்லியில் உள்ள சக அரசியல்வாதிகளோ, 'இந்த ஜால்ராக்களிடம் ஆதிஷி கவனமாக இருக்க வேண்டும்; இல்லையெனில், அவருக்கும் ஆபத்து தான்...' என்கின்றனர்.

