PUBLISHED ON : ஏப் 17, 2024 12:00 AM

'எளிதாக வெற்றி பெற்று விடலாம் என நினைத்தால் இப்படி சிக்கலாகி விட்டதே...' என புலம்புகிறார், பிரபல நடிகையும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கங்கனா ரனாவத்.
இவர், பிரபலமான ஹிந்தி நடிகை. ஜெ., வரலாறான, தலைவி உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் நடித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே, பா.ஜ., மற்றும் பிரதமர் மோடிக்கு ஆதரவாக பேசி வந்தார். இதனால், சிறந்த நடிகைக்கான விருது கிடைத்தபோது கூட, அது விமர்சனத்துக்கு ஆளானது.
இந்நிலையில், திடீரென பா.ஜ,வில் சேர்ந்த கங்கனாவுக்கு, யோகம் அடித்தது. லோக்சபா தேர்தலில் ஹிமாச்சல பிரதேச மாநிலம், மண்டி தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக போட்டியிடுகிறார். இவரது சொந்த மாநிலமும் இது தான்.
தனக்கு மக்களிடம் உள்ள பிரபலம், பிரதமர் மோடியின் செல்வாக்கு ஆகியவற்றின் வாயிலாக எளிதாக வெற்றி பெற்று விடலாம் என கணக்கு போட்டுக் காய் நகர்த்தி வந்தார், கங்கனா.
ஆனால், இங்கு முன்னாள் முதல்வர் வீர்பத்ர சிங்கின் மகனும், தற்போதைய மாநில அமைச்சருமான விக்ரமாதித்யா சிங்கை வேட்பாளராக நிறுத்தி, கங்கனாவின் மகிழ்ச்சிக்கு காங்கிரஸ் வேட்டு வைத்துள்ளது.
ஹிமாச்சலில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. விக்ரமாதித்யா அமைச்சராக உள்ளார். இவரது குடும்பம் ஹிமாச்சலில் செல்வாக்கு பெற்றது. இவரது தாய் பிரதிபா தான், மண்டி தொகுதியின் தற்போதைய சிட்டிங் எம்.பி., என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகார பலம், பண பலத்தை காட்டுவதற்கு விக்ரமாதித்யா தயாராகி வருவதால், கவலையில் ஆழ்ந்துள்ளார், கங்கனா.

