PUBLISHED ON : மார் 11, 2025 12:00 AM

'வயதான காலத்தில், ஒரு பெரிய மனிதரை இவ்வளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டனரே...' என, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குறித்து கவலைப்படுகின்றனர், கர்நாடகாவைச் சேர்ந்த அக்கட்சித் தொண்டர்கள்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மற்ற மாநிலங்களை போலவே, கர்நாடகா காங்கிரசிலும், சித்தராமையா தலைமையில் ஒரு கோஷ்டியும், துணை முதல்வரும், மாநில காங்., தலைவருமான சிவகுமார் தலைமையில் ஒரு கோஷ்டியும் செயல்பட்டு வருகின்றன.
துவக்கத்தில் மறைமுகமாக சண்டையிட்டு வந்த இந்த கோஷ்டியினர், சமீப காலமாக வெளிப்படையாகவே மோதிக் கொள்கின்றனர். சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், 'முதல்வர் பதவிக்கு புதிதாக ஒருவரை நியமித்தால் நன்றாக இருக்கும்...' என, சிவகுமார் ஆதரவாளர்கள் பேசத் துவங்கியுள்ளனர்.
இதற்கு பதிலடியாக, 'கர்நாடக மாநில காங்., தலைவராக நீண்ட காலமாக சிவகுமார் தான் உள்ளார். அவருக்கு பதிலாக வேறு ஒருவரை தலைவராக்க வேண்டும்...' என, சித்தராமையா ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
இந்த கோஷ்டிகளின் பஞ்சாயத்து, டில்லியில் உள்ள காங்., மேலிடத் தலைவர்கள் வரை சென்றுள்ளது. இதனால் கடுப்பான மல்லிகார்ஜுன கார்கே, 'தனிப்பட்ட நபர்களை விட கட்சி தான் முக்கியம். எனவே, சித்தராமையாவும், சிவகுமாரும் கருத்து வேறுபாடுகளை மறந்து இணைந்து செயல்பட வேண்டும். இல்லையெனில், நாம் எதிர்க்கட்சி வரிசையில் அமர நேரிடும்...' என, விரக்தியுடன் எச்சரித்துள்ளார்.