PUBLISHED ON : ஏப் 27, 2024 12:00 AM

'இப்போது இல்லை என்றால், எப்போதும் இல்லை...' என முழு வீச்சில் களத்தில் இறங்கி பிரசாரம் செய்கிறார், ராஜஸ்தான் முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான பஜன்லால் சர்மா.
ஆறு மாதங்களுக்கு முன், இங்கு சட்டசபை தேர்தல் நடந்தது. பா.ஜ., வெற்றி பெற்றால், யார் முதல்வர் என்ற விவாதம் நடந்தது.
முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே சிந்தியா, மூத்த மத்திய அமைச்சர்கள் உட்பட அரை டஜன் மூத்த தலைவர்கள் முதல்வர் பதவிக்கு முட்டி மோதினர். ஆனால், புதுமுகமான பஜன்லால் சர்மாவுக்கு அதிர்ஷ்டம் அடித்தது. இதனால், முதல்வர் பதவியை எதிர்பார்த்து காத்திருந்த மூத்த தலைவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
முதல்வர் பதவியை ஏற்ற ஆறு மாதங்களுக்குள் பஜன்லால் சர்மாவுக்கு, முதல் சோதனைக்களம் வந்துள்ளது. லோக்சபா தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ., வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டிய கட்டாயம் அவருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், கடும் வெயிலையும் பொருட்படுத்தாது, இரவு பகலாக களத்தில் இறங்கி, நெற்றி வியர்வை நிலத்தில் கொட்டும் அளவுக்கு தேர்தல் பணியாற்றி வருகிறார்.
'தேர்தலில் தோல்வி அடைந்தால், பஜன்லால் சர்மாவின் முதல்வர் பதவி பறிக்கப்பட்டு, வேறு ஒருவருக்கு கொடுக்கப்படலாம்...' என, அவரது அரசியல் எதிரிகள் பீதியை கிளப்புகின்றனர்.
'தலைக்கு மேல் கத்தி தொங்குகிறதே...' என புலம்புகிறார், பஜன்லால் சர்மா.

