PUBLISHED ON : ஆக 23, 2024 12:00 AM

'கேரளாவில் மட்டும் தான் திரைப்படம் எடுக்கின்றனரா; மற்ற மாநிலங்களில் எடுக்கவில்லையா...' என புலம்புகிறார், அம்மாநில முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன்.
இங்கு சில ஆண்டுகளுக்கு முன், பிரபல நடிகையை, சிலர் கடத்திச் சென்று பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு, நாடு முழுதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதில் பிரபல நடிகர் ஒருவர் கைது செய்யப்பட்டு, நீண்ட நாட்களுக்கு பின் ஜாமினில் வெளியில்வந்தார். இந்த விவகாரத்தை அடுத்து, கேரள திரைப்படத் துறையில் பெண்களுக்கு எதிராக நடக்கும் அத்துமீறல்கள் குறித்து விசாரிக்க, நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது.
இந்த கமிட்டி, இது குறித்து விசாரித்து நான்கு ஆண்டுகளுக்கு முன் அறிக்கை தாக்கல் செய்தது. அந்த அறிக்கை தற்போது வெளியாகி, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
'மலையாள திரைஉலகில், நடிகையருக்கு எதிராக பாகுபாடு காட்டப்படுகிறது. அவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகின்றனர்...' என்பது போன்ற குற்றச்சாட்டுகள் அதில் இடம் பெற்றுள்ளன.
இதையடுத்து, 'இதுபோன்ற கொடுமைகளை தடுக்காமல் கேரள அரசு வேடிக்கை பார்ப்பது ஏன்?' என, அரசுக்கு எதிராக பலரும் கண்டன குரல்களை எழுப்பி வருகின்றனர்.
முதல்வர் பினராயி விஜயனோ, 'வயநாடு நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பில் இருந்தே இன்னும் நாங்கள் மீளவில்லை; அதற்குள் அடுத்த அணுகுண்டா...' என, கவலையில் உள்ளார்.