PUBLISHED ON : மே 08, 2024 12:00 AM

'உயர்ந்த பதவியில் இருப்பவர்கள், இப்படித் தான் சில நேரங்களில் தர்மசங்கடமான சூழலை சந்திக்க வேண்டியிருக்கும்...' என கேரள மின் துறை அமைச்சரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவருமான கிருஷ்ணன் குட்டியை கிண்டலடிக்கின்றனர், எதிர்க்கட்சியினர்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இந்த கோடை காலத்தில் கேரளாவில் வழக்கத்தை விட கடுமையான வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால், மாநிலத்தில் மின்சார பயன்பாடு உச்சத்தை தொட்டுள்ளது. வீடுகளுக்குள் முடங்கியுள்ள மக்கள், 'ஏசி'யை அதிகமாக பயன்படுத்துகின்றனர்.
அடிக்கடி மின்சாரம்துண்டிக்கப்பட்டு, மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர். மாநிலத்தின் பல பகுதிகளிலும் மின்சார வாரியத்துக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில், கேரளாவில் நடந்த லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவின் போது, ஒரு ஓட்டுச்சாவடிக்கு, மின் துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி ஓட்டு போட வந்தார். அப்போது அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அவர் சிறிது நேரம் அங்கு அமர்ந்திருக்க வேண்டியதாயிற்று.
இதை பார்த்த சக வாக்காளர்கள், 'மின்சாரம் இல்லாமல் இருப்பது எவ்வளவு சிரமம் என்பதை, அந்த துறையின் அமைச்சரே இப்போது நேரில் அனுபவித்து விட்டார். இனியாவது பிரச்னைக்கு தீர்வு கிடைத்தால் சரிதான்...' என, அவரது காதில் கேட்கும்படி முணுமுணுத்தனர்.

