PUBLISHED ON : மே 27, 2024 12:00 AM

'கூட்டணி கட்சிகளால் பெரிய தொல்லையா போச்சு...' என புலம்புகிறார், உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்.
உ.பி.,யில் இன்னும் ஒரு கட்ட தேர்தல் நடக்க வேண்டியுள்ளது. இந்த தேர்தலும் எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாக நடந்து முடிந்து விட வேண்டும் என்பதில் ஆர்வமாக இருக்கிறார், முதல்வர் யோகி ஆதித்யநாத்.
ஆனால், அவரது ஆசைக்கும், ஆர்வத்துக்கும் தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர், பா.ஜ., கூட்டணியில் உள்ள சில கட்சிகளின் தலைவர்கள்.
இங்கு, 'சல்தேவ் பாரதிய சமாஜ்' என்ற ஒரு கட்சி உள்ளது. இதன் தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர். இவரது கட்சிக்கு, உ.பி.,யின் ஒரு சில மாவட்டங்களில் செல்வாக்கு உள்ளது. இதனால், இவர்களை கூட்டணியில் சேர்த்து உள்ளது, பா.ஜ.,
சமீபத்தில், ஒரு கூட்டத்தில் பேசிய ஓம் பிரகாஷ் ராஜ்பர், 'பா.ஜ., மற்றும் கூட்டணி கட்சியினர், எதிர்க்கட்சியினர் செல்லும் வாகனங் களை சோதனையிட்டு, அவர்களிடம் பணம் இருந்தால், அதை பறிமுதல் செய்ய வேண்டும்.
'அவர்களிடமிருந்து, 10 லட்சம் ரூபாயை கைப்பற்றினால், அதில் ஒரு லட்சத்தை மட்டும் தேர்தல் அதிகாரிகளிடம் கொடுத்து விட்டு, மீதமுள்ளதை, நம் தேர்தல் செலவுக்கு வைத்துக் கொள்ளலாம்...' என பேசினார்.
இவரது பேச்சை, 'வீடியோ' எடுத்து, தேர்தல் அதிகாரிகளிடம் புகார் செய்துள்ளனர் எதிர்க்கட்சியினர். 'கூட்டணி கட்சியினர் இப்படி எல்லை மீறி பேசுகின்றனரே...' என கவலைப்படுகிறார், யோகி ஆதித்யநாத்.

