PUBLISHED ON : ஏப் 03, 2024 12:00 AM

'இந்த தள்ளாத வயதில், இவரை இப்படி தர்மசங்கடமான நிலைக்கு தள்ளி விட்டு விட்டனரே...' என, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான அந்தோணியை நினைத்து பரிதாபப்படுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. அந்தோணி, கேரளாவின் முதல்வர், மத்திய அமைச்சர் என, பல உயர் பதவிகளை வகித்தவர்.
வயது மூப்பு காரணமாக, தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி, வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். இவரது மகன் அனில் அந்தோணி, சில மாதங் களுக்கு முன் பா.ஜ.,வில் இணைந்து, தன் தந்தைக்கு அதிர்ச்சி அளித்தார்.
பாரம்பரியமான காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்த தன் மகன், பா.ஜ.,வுக்கு தாவியதை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. வரும் லோக்சபா தேர்தலில் அனில் அந்தோணி, பத்தினம்திட்டா லோக்சபா தொகுதியில் பா.ஜ., வேட்பாளராக களம் இறங்குகிறார்.
காங்கிரஸ் சார்பில், தற்போதைய எம்.பி.,யான ஆண்டோ என்பவர் மீண்டும் போட்டியிடுகிறார். அந்தோணிக்கு இங்கு செல்வாக்கு அதிகம் என்பதால், தனக்கு பிரசாரம் செய்ய வரும்படி அவருக்கு ஆண்டோ அழைப்பு விடுத்துள்ளார்.
'ஆண்டோவுக்காக பிரசாரம் செய்தால், மகனுக்கு எதிராக பிரசாரம் செய்ய வேண்டியிருக்கும். மகனுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தால், கட்சியில் பிரச்னை ஏற்படும்...' என்ற குழப்பத்தில் உள்ளார், அந்தோணி.
'கட்சியா, குடும்பமா என்ற முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்...' என, அந்தோணிக்காக பரிதாபப்படுகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

