PUBLISHED ON : மார் 30, 2024 12:00 AM

'வேறு வழியில்லை; இவரும் குடும்ப அரசியலைத் தான் பின்பற்றியாக வேண்டும்...' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலைப் பற்றி கூறுகின்றனர், சக அரசியல்வாதிகள்.
டில்லி மதுபான கொள்கை முறைகேட்டில்நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான வழக்கில், அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது.
ஏற்கனவே ஆம் ஆத்மியின் மூத்த நிர்வாகிகள் பலர், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், தற்போது கெஜ்ரிவாலும் சிக்கி உள்ளார்.
இதனால், கேப்டன் இல்லாத கப்பல் போல, வழி நடத்துவதற்கான தலைவர்கள் இல்லாமல் தவிக்கிறது, ஆம் ஆத்மி கட்சி.
இதையடுத்து, தன் மனைவி சுனிதாவை, கட்சியின் கவுரவ ஒருங்கிணைப்பாளராக நியமிக்க கெஜ்ரிவால் திட்டமிட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
கெஜ்ரிவாலைப் போல சுனிதாவும், இந்திய வருவாய் துறை அதிகாரியாக பணியாற்றி, விருப்ப ஓய்வு பெற்றவர் தான்.
இப்போதைக்கு கட்சியை வழி நடத்த சுனிதாவை விட்டால், வேறு நம்பிக்கையான ஆள் இல்லை என, கருதுகிறார், கெஜ்ரிவால்.
இதனால், ஆம் ஆத்மியின் கவுரவ ஒருங்கிணைப்பாளராக சுனிதா, எந்த நேரத்திலும் நியமிக்கப்படலாம் என, ஆம் ஆத்மி கட்சியினரே கூறுகின்றனர்.
'ஊழல், குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி துவக்கிய கெஜ்ரிவாலும், இப்போது மனைவியை கட்சி தலைவராக்க முடிவு செய்துள்ளது, காலத்தின் கோலம் தான்...' என்கின்றனர், டில்லியில் உள்ள அரசியல்வாதிகள்.

