PUBLISHED ON : ஆக 07, 2024 12:00 AM

'இதில் இவ்வளவு சிக்கல் இருக்கும் என நினைத்துக் கூட பார்க்கவில்லை...' என புலம்புகிறார், பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சரும்,பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு.
இவர் வட கிழக்கு மாநிலத்தைச் சேர்ந்தவர். இவரது சுறுசுறுப்பை பார்த்த பிரதமர் மோடி, தன் முதல் அமைச்சரவையில் மிகப் பெரிய பொறுப்பான உள்துறை இணை அமைச்சர் பதவியை அவருக்குகொடுத்தார். அப்போது, அவருக்கு, 42 வயது தான்.
மோடியின் இரண்டாவதுஅமைச்சரவையில், ரிஜிஜுவுக்கு கேபினட் அந்தஸ்து கிடைத்தது. சட்டத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இந்த முறை இவருக்கு சோதனை காத்திருந்தது. நீதித் துறையுடன் மோதல் போக்கை பின்பற்றியதால், சட்டத்துறை பறிக்கப்பட்டு, உணவு பதப்படுத்துதல் என்ற முக்கியத்துவம் இல்லாத துறைக்கு மாற்றப்பட்டார்.
மோடி தலைமையில் மூன்றாவது முறையாக ஆட்சி அமைந்ததும், அதில் கிரண் ரிஜிஜுவுக்கு வாய்ப்பு கிடைக்காது என்று தான் பலரும் நினைத்தனர். ஆனால், பார்லிமென்ட் விவகாரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
மகிழ்ச்சியுடன் பணியை துவக்கிய ரிஜிஜு, இப்போது நெருக்கடியில் சிக்கியுள்ளார். பார்லிமென்டில் எதிர்க்கட்சிகளை சமாளிக்கும் மிகப் பெரிய பொறுப்புடன், சபையை சுமுகமாக நடத்துவதிலும், இவருக்கு முக்கிய பங்கு உண்டு.
இதனால், 'பார்லிமென்ட் கூட்டத் தொடர் துவங்கினாலே, பாதி துாக்கம் போய் விடுகிறது...' என, வருத்தப்படுகிறார், கிரண் ரிஜிஜு.