PUBLISHED ON : ஜூன் 27, 2024 12:00 AM

'ரொம்பவே உணர்ச்சி வசப்பட்டு விட்டார். அவரை தேற்றுவதற்கு நீண்ட நேரமாகி விட்டது...' என, நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா பற்றி கூறுகின்றனர், அவரது உதவியாளர்கள்.
நரேந்திர மோடி, மூன்றாவது முறையாக சமீபத்தில் பிரதமராக பதவியேற்றார். இந்த விழாவில், ஹசீனா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அடுத்த நாள் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாவின் வீட்டுக்கு சென்ற ஹசீனா, ராகுல், பிரியங்கா ஆகியோருடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார்.
சோனியாவை பார்த்ததும் நெகிழ்ச்சி அடைந்து கண்ணீர் விட்டார். உடன் சென்ற அவரது உதவியாளர்கள், அவருக்கு ஆறுதல் கூறி அழைத்து வந்தனர்.
அப்போது ஹசீனா, 'என் தந்தை முஜிப்புர் ரகுமான் தான், 'வங்கதேசத்தின் தந்தை' என, அழைக்கப்பட்டவர். அவரையும், என் தாயையும், என் மூன்று சகோதரர்களையும் ராணுவ புரட்சியின் போது கொலை செய்து விட்டனர். அதேபோல், சோனியாவின் மாமியாரான முன்னாள் பிரதமர் இந்திரா, கணவர் ராஜிவ் ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டனர்.
'எங்கள் குடும்பத்துக்கும், சோனியா குடும்பத்துக்கும் இதுபோல் பல ஒற்றுமை உண்டு. என் தந்தை, பாகிஸ்தானை பிரித்து, வங்கதேசத்துக்கு தனி நாடு கேட்டு போராடியபோது, இந்திய ராணுவத்தை அனுப்பி, அதை சாத்தியமாக்கியவர், இந்திரா.
'இதன் காரணமாகத் தான், சோனியா குடும்பத்தினரை சந்தித்தபோது அழுது விட்டேன்...' என கூறியுள்ளார், ஹசீனா.
இதைக் கேட்ட அவரது உதவியாளர்கள், 'ஆக் ஷனும், சென்டிமென்டும் கலந்த கதையாக இருக்கிறதே...' என, ஆச்சரியப்பட்டனர்.