PUBLISHED ON : மே 15, 2024 12:00 AM

'ஏற்கனவே சகோதரர்களுக்கு இடையே நடக்கும் சண்டையை தீர்த்து வைப்பதே பெரிய பிரச்னையாக உள்ளது. இதில் சகோதரிகள் வேறு களம் இறங்கி விட்டனரே...' என கவலைப்படுகின்றனர், பீஹாரில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியினர்.
இங்கு முதல்வர் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம், பிரதான எதிர்க்கட்சியாக உள்ளது.
லாலுவின் மூத்த மகனான தேஜ் பிரதாப், இளைய மகன் தேஜஸ்வி யாதவ் ஆகியோரிடையே ஏற்கனவே பதவிப் பிரச்னையில் குடுமிபிடி சண்டை நடக்கிறது.
மூத்த மகனான தன்னை விட்டு, இளைய மகனானதேஜஸ்விக்கு ஏற்கனவே துணை முதல்வர் பதவியை கொடுத்து விட்டதாக, லாலு பிரசாத் மீது கோபத்தில் இருக்கிறார், தேஜ் பிரதாப்.
இருவருக்கும் அவ்வப்போது கருத்து மோதல்கள் ஏற்படும்போது, கட்சி நிர்வாகிகள் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைப்பர்.
தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில் லாலுவின் மூத்த மகள் மிசா பார்தி, பாடலிபுத்ரா தொகுதியிலும், இளைய மகள் ரோகிணி, சரண் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். 'லாலுவின் அரசியல் வாரிசு மிசா பார்தி தான்' என, அவரது ஆதரவாளர்கள் பிரசாரம் செய்து வருகின்றனர்.
ரோகிணியின் ஆதரவாளர்களோ, 'தந்தைக்குசிறுநீரகத்தை தானமாக தந்தவர் எங்கள் தலைவி...' என, தங்கள் பங்கிற்கு முழங்கி வருகின்றனர். ராஷ்ட்ரீய ஜனதா தளம் நிர்வாகிகளோ, 'சகோதரி யுத்தம் எங்கு போய் முடியப் போகிறதோ...' என, புலம்புகின்றனர்.

