PUBLISHED ON : செப் 09, 2024 12:00 AM

'கூட்டணி என்றாலே பெரிய தலைவலி தான்...' என எரிச்சலுடன் கூறுகின்றனர், பா.ஜ., மேலிட தலைவர்கள்.
தற்போது மத்தியில் அமைந்துள்ள, பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் பீஹார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
மத்தியில் ஆட்சி நீடிப்பதற்கு இந்த கட்சிகளின் ஆதரவு மிகவும் அவசியம். இதனால், இந்த கட்சிகளை அனுசரித்து போக வேண்டிய நிலையில், பா.ஜ., தலைவர்கள் உள்ளனர்.
பீஹாரின் அண்டை மாநிலமான ஜார்க்கண்டில் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதில், எப்படியாவது ஆட்சியை பிடித்து விட வேண்டும் என, பா.ஜ., துடியாய் துடிக்கிறது.
ஏனெனில், இங்கு தற்போது ஆளுங் கட்சியாக உள்ள ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, எதிர்க்கட்சிகளின், 'இண்டியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ளது.
பா.ஜ.,வின் கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகியவற்றுக்கு இங்கு ஓரளவு செல்வாக்கு உள்ளது.
இதை காரணமாக வைத்து, 'அதிக தொகுதிகளை எங்களுக்கு ஒதுக்க வேண்டும்; இல்லையெனில் தனித்து போட்டியிடுவோம்...' என, இந்த கட்சிகளின் தலைவர்கள் இப்போதே குரல் எழுப்ப துவங்கி விட்டனர்.
இதனால் கடுப்பான, பா.ஜ., தலைவர்கள், 'இன்னும் ஆட்டமே ஆரம்பமாகவில்லை. அதற்குள் அட்டூழியத்தை ஆரம்பித்து விட்டனரா...' என, புலம்புகின்றனர்.