PUBLISHED ON : ஜூன் 11, 2024 12:00 AM

'அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தாக்கு பிடிக்க முடியுமா என தெரியவில்லையே...' என கவலைப்படுகிறார், ஆந்திராவின், 'காபந்து' முதல்வர் பதவியில் இருக்கும், ஒய்.எஸ்.ஆர்.காங்., தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி.
கடந்த ஐந்து ஆண்டுகளாக முதல்வராக பதவி வகித்த ஜெகன் மோகன், துவக்கத்தில் நன்றாகவே ஆட்சி நடத்தினார். கல்வி, வேலை வாய்ப்பு போன்ற விஷயங்களில் பல புதுமைகளை அரங்கேற்றினார். இதனால், அவருக்கு பாராட்டு குவிந்தது. ஆனால், தேர்தல் நெருங்கிய நேரத்தில் அவருக்கு தோல்வி பயம் வந்து விட்டது.
தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடுவை கைது செய்து சிறையில் அடைத்தது, மூத்த அரசியல்வாதி என்ற மரியாதை இல்லாமல், சட்டசபையில் அவரையும், அவரது குடும்பத்தினரையும் தரக்குறைவாக பேசியது என, பல விஷயங்களில் எல்லை மீறினார், ஜெகன்.
இதற்கான பலன், சட்டசபை தேர்தல் முடிவுகளில் எதிரொலித்தது. மொத்தம் உள்ள, 175 தொகுதிகளில், சந்திரபாபுவின் தெலுங்கு தேசம், 135ல் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அதன் கூட்டணி கட்சியான நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா, 21 தொகுதிகளில் வெற்றி பெற்றது.
ஜெகன் மோகன் கட்சியோ, 11 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெறாமல் படு தோல்வியை சந்தித்தது.
'ஆடிய ஆட்டம் என்ன...' என ஜெகன் மோகனை கிண்டல் அடிக்கின்றனர், தெலுங்கு தேசம் கட்சியினர்.

