PUBLISHED ON : மார் 02, 2025 12:00 AM

'தடாலடியாக எதையாவது செய்யப் போகிறார் என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. ஆனால், எப்போது செய்யப் போகிறார் என்றுதான் தெரியவில்லை...' என, திரிணமுல் காங்கிரஸ் பொதுச்செயலர் அபிஷேக் பானர்ஜி பற்றி கூறுகின்றனர், அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மம்தாவின் மருமகன் தான், அபிஷேக் பானர்ஜி.
இவர், லோக்சபா எம்.பி.,யாகவும், கட்சியின் பொதுச் செயலராகவும் பதவி வகிக்கிறார். தன் அரசியல் வாரிசாக அபிஷேக்கை அறிவிக்க, மம்தா திட்டமிட்டிருந்தார். ஆனால்,சமீபகாலமாக நடக்கும் அரசியல் நகர்வுகள், மம்தாவை யோசிக்க வைத்துள்ளன.
மேற்கு வங்கத்தில் ஆசிரியர்கள் நியமனத்தில் நடந்த முறைகேடு குறித்த வழக்கை, சி.பி.ஐ., மற்றும்அமலாக்கத் துறை விசாரித்து வருகின்றன. இந்த வழக்கில் அபிஷேக்கின் பெயரும் உள்ளது. எந்த நேரத்தில்வேண்டுமானாலும், சி.பி.ஐ., தன்னை கைது செய்யும் என்ற பயத்தில் அவர் உள்ளார்.
இதனால், திரிணமுல் கட்சியை இரண்டாக உடைப்பது அல்லது பா.ஜ.,வில் இணைவது என்ற முடிவை அபிஷேக் எடுத்துள்ளதாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேசப்படுகிறது. இதையடுத்து, அவரை ஓரங்கட்ட முடிவு செய்துஉள்ளார், மம்தா.
ஆனால், அபிஷேக்கோ, 'நான் மம்தாவின் போர்ப்படை தளபதி. கட்சி மாற வாய்ப்பு இல்லை...' என, திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
'கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆக வேண்டும்...' என, கிண்டலடிக்கின்றனர், மேற்கு வங்க மக்கள்.