PUBLISHED ON : மே 09, 2024 12:00 AM

'யார் கண்பட்டதோ தெரியவில்லையே; இப்படி ஆகி விட்டதே...' என, பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதியின் உறவினரான ஆகாஷ் ஆனந்த் குறித்து கவலைப்படுகின்றனர், அந்த கட்சியின் நிர்வாகிகள்.
உத்தர பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்த மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, கடந்த சில தேர்தல்களில் படுதோல்வியை சந்தித்து வருகிறது.
இதனால், அந்த கட்சி தலைவர் மாயாவதி விரக்தி அடைந்து விட்டார். வயதும் ஆகி விட்டதால், கட்சியின் முக்கிய பொறுப்புகளை, தன் சகோதரரின் மகனான ஆகாஷ் ஆனந்திடம் ஒப்படைத்தார்.
தற்போது நடக்கும் லோக்சபா தேர்தலில், மாயாவதி பிரசாரம் செய்தாலும், ஆகாஷ் ஆனந்த் தான், மாநிலம் முழுதும் பம்பரமாக சுழன்று வந்தார். கட்சி நிர்வாகிகளை அரவணைத்து செல்வது, பிரசார வியூகம் வகுப்பது என, பாராட்டும் வகையில் செயல்பட்டார்.
இந்த நிலையில் தான், ஆகாஷ் ஆனந்தை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பொறுப்பிலிருந்து அதிரடியாக நீக்கிய மாயாவதி, 'அவருக்கு இன்னும் அரசியல் பக்குவம் வரவில்லை. அதனால், என் அரசியல் வாரிசு என்ற தகுதியையும், அவர் இழந்து விட்டார். பக்குவம் வந்தபின், அவருக்கு பொறுப்பு வழங்கப்படும்...' என, அதிரடியாக அறிவித்தார்.
கட்சி நிர்வாகிகளோ, 'கட்சி மீண்டும் உயிர்த்தெழும் என்ற நம்பிக்கை இருந்தது. இப்போது அந்த நம்பிக்கையும் சுத்தமாக போய் விட்டது...' என, புலம்புகின்றனர்.