PUBLISHED ON : ஆக 08, 2024 12:00 AM

'எங்களால் முடியாத விஷயத்தை இவர் செய்யப் போகிறாரா...' என தெலுங்கானா முதல்வரும், காங்கிரசைச் சேர்ந்தவருமான ரேவந்த் ரெட்டி பற்றி கிண்டலாக பேசுகின்றனர், எதிர்க்கட்சியினர்.
ரேவந்த் ரெட்டி, தெலுங்கானாவின் முதல்வரானதில் இருந்தே எதையாவது சாதித்து விட வேண்டும் என துடிக்கிறார். இதற்காக பல புதிய திட்டங்கள், அறிவிப்புகளை நாள்தோறும் வெளியிட்டு வருகிறார். அடுத்த கட்டமாக, அமெரிக்காவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார்.
தெலுங்கானாவில் முதலீடு செய்யும்படி, அங்குள்ள தொழில் அதிபர்களுக்கு அழைப்பு விடுப்பது, முசி ஆற்றை துாய்மைப்படுத்தி நவீனப்படுத்துவது ஆகிய இரண்டு விஷயங்கள் தான், இவரது சுற்றுப் பயணத்தின் நோக்கம்.
முசி நதிக்கு முச்சுக்குண்டா நதி என்ற பெயரும் உண்டு. பழைய, புதிய ஹைதராபாத் நகரங்களின் மையப் பகுதியில் பாய்கிறது. ஒரு காலத்தில் படகு போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளுடன் இருந்த நதி, இப்போது மாசடைந்துள்ளது.
இதை துாய்மைப்படுத்தி, லண்டனில் உள்ள தேம்ஸ் நதி போல் மாற்றி, தேசிய அளவில் முக்கியமான சுற்றுலா தலமாக மாற்ற ரேவந்த் ரெட்டி விரும்புகிறார். இதற்காக தொழில்நுட்ப ஆலோசனைகளை பெறவும், நிதி உதவி பெறவும் அமெரிக்கா செல்ல உள்ளார்.
எதிர்க்கட்சியான பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியினர், 'எங்களின் 10 ஆண்டு ஆட்சியில், இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்டோம். பலன் கிடைக்கவில்லை. நேற்று வந்த இவர், என்ன சாதித்து விடுவார் என பார்ப்போம்...' என்கின்றனர்.
***