PUBLISHED ON : மார் 10, 2025 12:00 AM

'இனி, முதல்வர் பதவியை இவரால் நினைத்துக்கூட பார்க்க முடியாது...' என, பீஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவருமான நிதிஷ் குமார் பற்றி கிண்டல் அடிக்கின்றனர், அங்குள்ள எதிர்க்கட்சியினர்.
பீஹாரில் கடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளமும், பா.ஜ.,வும் கூட்டணி அமைத்தன. ஐக்கிய ஜனதா தளத்தை விட, பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றபோதும், கூட்டணி தர்மத்துக்காக முதல்வர்பதவியை நிதிஷ் குமாருக்கு பா.ஜ., விட்டுக்கொடுத்தது.
இந்தாண்டு இறுதியில், பீஹாரில் மீண்டும் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இதிலும், இந்த இரண்டு கட்சிகளும் கூட்டணியில் தொடர முடிவு செய்துள்ளன.
கடந்த முறை போல், இந்த முறை முதல்வர் பதவியை நிதிஷ் குமாரிடம் அவ்வளவு எளிதாக கொடுக்க, பா.ஜ., தலைவர்கள் தயாரில்லை என்பதற்கான அறிகுறிகள் தென்படத் துவங்கியுள்ளன.
சமீபத்தில், பீஹார் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், ஏழு பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். இவர்கள் ஏழு பேருமே, பா.ஜ.,வைச் சேர்ந்தவர்கள். இதனால், அமைச்சர் பதவி கிடைக்காத, நிதிஷ் கட்சியைச் சேர்ந்த மூத்த எம்.எல்.ஏ.,க்கள் அதிருப்தியில் உள்ளனர்.
'நிதிஷ் குமார் தான் முதல்வர். ஆனாலும், தங்கள் கட்சியினருக்கு அமைச்சரவையில் கூடுதல் பிரதிநிதித்துவத்தை அவரால் வழங்க முடியவில்லை. சட்டசபை தேர்தலில் மீண்டும் இந்த கூட்டணி வெற்றி பெற்றாலும், தனக்கு முதல்வர் பதவி வேண்டும் என, நிதிஷ் குமாரால் இனி கேட்கவே முடியாது...' என்கின்றனர், எதிர்க்கட்சியினர்.