PUBLISHED ON : நவ 17, 2026 12:00 AM

‘தேர்ந்த அரசியல்வாதி என்பதை நிரூபித்து விட்டார்...’ என, ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு குறித்து கூறுகின்றனர், ஆந்திர மக்கள்.
இளம் தலைமுறையினரின் மனநிலை, சிந்தனை ஆகியவற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டார், சந்திரபாபு நாயுடு. இதற்காக, சமீபத்தில் ஆந்திராவின் அமராவதி நகரில் ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தார்.
இதில், ஏராளமான கல்லுாரி மாணவ -– மாணவியர் பங்கேற்றனர். அவர்களுடன் சந்திரபாபு நீண்ட நேரம் கலந்துரையாடினார். அப்போது, அவரிடம் மாணவர்கள் பல்வேறு கேள்விகளை கேட்டனர். பொருளாதார ரீதியான கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் அளித்த சந்திரபாபு, அரசியல் ரீதியான கேள்விகளுக்கு நிதானமாக பதில் அளித்தார்.
ஒரு மாணவர், ‘உங்களுக்கு பிடித்த தெலுங்கு நடிகர் பவன் கல்யாணா, பாலகிருஷ்ணாவா...’ என கேள்வி எழுப்பினார். இரண்டு பேருமே தெலுங்கில் பிரபலமான நடிகர்களாக இருந்தாலும், பவன் கல்யாண் கூட்டணி கட்சியைச் சேர்ந்தவர்; ஆந்திராவின் துணை முதல்வராகவும் பதவி வகிக்கிறார்.
பாலகிருஷ்ணாவோ சந்திரபாபுவின் மைத்துனர். எனவே, இருவரையும் பகைத்து கொள்வதை தவிர்க்கும் வகையில், ‘சில கேள்விகளுக்கு என்னால் நேரடியாக பதில் அளிக்க முடியாது...’ என நழுவினார், சந்திரபாபு.
ஆந்திர மக்களோ, ‘சந்திரபாபு நாயுடு சாமர்த்தியமான அரசியல்வாதி தான்...’ என, பாராட்டுகின்றனர்.
