PUBLISHED ON : ஜன 28, 2025 12:00 AM

'அதிகாரம் இருந்தால் ஒரு மாதிரியும், இல்லாவிட்டால் ஒரு மாதிரியும் பழகுகின்றனர்; இது, நன்றி கெட்ட உலகம்...' என கண்ணீர் வடிக்கிறார், ஆந்திர முன்னாள் முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி.
'ஆந்திராவின் நிரந்தர முதல்வர். ஆந்திர அரசியலில் இனி தவிர்க்க முடியாத அரசியல்வாதி...' என, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வரை, ஜெகனை, அவரது கட்சியினரும், ஆதரவாளர்களும் ஏகத்துக்கும் புகழ்ந்தனர்.
ஆனால், கடந்த சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தல்களில் இவரது கட்சி படுதோல்வியை சந்தித்து, ஆட்சியை, தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடுவிடம் பறிகொடுத்தது.
இதையடுத்து, ஜெகன்மோகன் கட்சியினர் ஒவ்வொருவராக, தெலுங்கு தேசம் கட்சிக்கு ஓட்டம் பிடித்து வருகின்றனர்; தற்போது, விரல் விட்டு எண்ணக் கூடிய தலைவர்கள் மட்டுமே, ஜெகனுடன் உள்ளனர்.
ஜெகனின் நம்பிக்கைக்குரிய விசுவாசியும், கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான விஜய்சாய் ரெட்டி, தன் பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்ததுடன், அரசியலுக்கே முழுக்கு போட்டு, 'ஆளை விட்டால் போதும்' என, ஓட்டம் பிடித்தார்.
இதனால் நொறுங்கி போன ஜெகன், 'மற்றவர்களை போல், தெலுங்கு தேசம் கட்சிக்கு தாவாமல், அரசியலை விட்டே ஒதுங்கிய விஜய்சாய் ரெட்டியின் செயல், சோகத்திலும் சற்று ஆறுதல் அளிக்கிறது...' என, தனக்குத் தானே மனதை தேற்றி வருகிறார்.