PUBLISHED ON : மே 04, 2025 12:00 AM

'இந்த தேர்தலிலும் குழப்பத்தை ஏற்படுத்த தயாராகி விட்டார் போலிருக்கிறதே...' என, மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சரும், லோக் ஜன சக்தி கட்சி தலைவருமான சிராக் பஸ்வானை நினைத்து புலம்புகின்றனர், ஐக்கிய ஜனதா தளம் கட்சியினர்.
பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது. 2020ல் இங்கு நடந்த சட்டசபை தேர்தலில், இந்த கூட்டணி களத்தில் இருந்தது.
சிராக் பஸ்வானை கூட்டணியில் சேர்க்க, ஐக்கிய ஜனதா தளத்தின் நிதிஷ் குமார் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால், பா.ஜ., போட்டியிட்ட தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தாத சிராக் பஸ்வான், ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் வேட்பாளர்களை நிறுத்தி கடும் போட்டியை உருவாக்கினார். இதனால், அந்த தேர்தலில் பா.ஜ.,வை விட மிக குறைவான தொகுதிகளில் மட்டுமே ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது.
அடுத்த சில மாதங்களில், பீஹாரில் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், மீண்டும் களத்தில் குதித்துள்ளார் சிராக் பஸ்வான். பீஹார் முழுதும், 'வருங்கால முதல்வரே...' என, அச்சடிக்கப்பட்ட போஸ்டர்களை அவரது கட்சியினர் ஒட்டியுள்ளனர்.
பா.ஜ., தலைமையிலான கூட்டணியில், சிராக் பஸ்வான் கட்சி இடம் பெற்றுள்ள நிலையில், ஐக்கிய ஜனதா தளத்துக்கு சமமான தொகுதிகளை தங்கள் கட்சிக்கு ஒதுக்கும்படி, அவர் நெருக்கடி கொடுப்பார் என கூறப்படுகிறது.
இதனால் கலக்கம் அடைந்துள்ள நிதிஷ் குமார், 'என்ன ஒழித்துக் கட்டாமல் சிராக் பஸ்வான் ஓயமாட்டார் போலிருக்கிறதே...' என, புலம்புகிறார்.