PUBLISHED ON : டிச 23, 2024 12:00 AM

'சர்ச்சைக்குரிய விஷயங்கள் பேசுவதை இவர் தவிர்த்திருக்கலாமே...' என, கேரள முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் குறித்து, அவரது கட்சியினரே முணுமுணுக்கின்றனர்.
கேரளாவில், எந்த கட்சியும் தொடர்ச்சியாக இரண்டு முறை ஆட்சி அமைத்தது இல்லை என்ற வரலாறு நீண்ட காலமாக இருந்தது. கடந்த சட்டசபை தேர்தலில் அதை முறியடித்து, ஆட்சியை தக்க வைத்தார், பினராயி விஜயன்.
வரும், 2026ல், சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளதால், அதிலும் வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' அடிக்க வேண்டும் என்ற முடிவுடன் அவர் உள்ளார். இதற்காக புதுமையான திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறார்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய பினராயி விஜயன், 'கேரள சிறைகளில், கைதிகளின் நலனுக்காக பல திட்டங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
'நீண்ட காலமாக கைதிகளாக உள்ளவர்கள், மன இறுக்கத்தால் பாதிக்கப்படுகின்றனர்; அதற்காக, அவர்களை சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ளோம்...' என்றார்.
இதற்கு, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 'சிறை என்பதே தவறு செய்தவர்களுக்கு தண்டனை அளிப்பதற்காக கட்டப்பட்டது தான். கைதிகளை சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்று மகிழ்வித்தால், வெளியில் உள்ளவர்களுக்கும் சிறைக்கு செல்லலாம் என்ற எண்ணம் ஏற்படாதா...' என, கொதிக்கின்றனர்.
மார்க்சிஸ்ட் கட்சியினரோ, 'பிள்ளையார் பிடிக்க போய், குரங்கை பிடித்த கதையாக போய் விட்டதே...' என, கவலைப்படுகின்றனர்.