
'இவர்களது வியூகம், எந்த அளவுக்கு கை கொடுக்கும் என்பது, தேர்தல் முடிவுகள் வந்தால்தான் தெரியும்...' என, ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.,வினரை பற்றி கூறுகின்றனர், அந்த மாநில மக்கள்.
இங்கு, முதல்வர்ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, வரும் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில், இரண்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் ஒரு அணியாகவும், பா.ஜ., மற்றொரு அணியாகவும் தேர்தலை சந்திக்கின்றன. ஆறு மாதங்களுக்கு முன், முதல்வர் சோரன், சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கி, சிறைக்கு செல்லும் சூழல் உருவானதால், தன் பதவியை ராஜினாமா செய்தார்.
மேலும், கட்சியின் மூத்த தலைவரான, பழங்குடியின சமூகத்தை சேர்ந்த சம்பாய் சோரனை முதல்வராக்கினார். சிறையில் இருந்து ஜாமினில் வந்ததும், முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும்படிசம்பாய் சோரனுக்கு, ஹேமந்த் சோரன் உத்தரவிட்டார்.
இதனால் விரக்தி அடைந்த சம்பாய் சோரன், முதல்வர் பதவியை ராஜினாமா செய்த கையுடன், பா.ஜ.,வில் இணைந்தார். தற்போதைய தேர்தலில், பா.ஜ., வேட்பாளராக சம்பாய் சோரன் போட்டியிடுகிறார்.
அவரை வைத்து, ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின்ஓட்டு வங்கியான பழங்குடியின மக்களை வளைத்து விடலாம் என்பது, பா.ஜ., தலைவர்களின் திட்டம்.
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினரோ, 'மண் குதிரையை நம்பி களத்தில் இறங்கும் பா.ஜ.,வினரின்நிலை பரிதாபமாக உள்ளது...' என, கிண்டல் அடிக்கின்றனர்.