PUBLISHED ON : ஏப் 15, 2025 12:00 AM

'ஏற்கனவே தலைக்கு மேல் வெள்ளம் போகிறது. இதில் புது பஞ்சாயத்து வேறா...' என புலம்புகிறார், மேற்கு வங்க முதல்வரும், திரிணமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி.
கொல்கட்டா அரசு மருத்துவமனையில் பணியாற்றிய பெண் டாக்டர், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. டாக்டர்கள் நடத்திய போராட்டத்தால், ஆட்சிக்கே ஆபத்து ஏற்பட்டது.
இந்த பிரச்னை மறைவதற்குள், மேற்கு வங்க அரசால், 25,000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக கூறி, அவர்களது பணி நியமனத்தை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ரத்து செய்தது. இதனால், அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதை சமாளிக்க முடியாமல் மம்தா திணறி வரும் நிலையில், அடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. மத்திய அரசால் சமீபத்தில் பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் மசோதாவை எதிர்த்து, மேற்கு வங்கத்தில் முஸ்லிம்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டம் பெரும் கலவரமாக மாறி, மூன்று உயிர்கள் பலியாகி உள்ளன. வன்முறையை ஒடுக்க துணை ராணுவப் படை குவிக்கப்பட்டுள்ளது.
'அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. இந்த நேரத்தில், ஒவ்வொரு பிரச்னையாக வரிசை கட்டி வந்து, எனக்கு தொல்லை கொடுக்கின்றன. எல்லா பிரச்னையும் ஒன்று சேர்ந்து, தேர்தலில் என்னை கவிழ்த்து விடும் போலிருக்கிறதே; இது எதிர்க்கட்சியினரின் திட்டமிட்ட சதி...' என, அலறுகிறார் மம்தா.