
'முதல்வர் என்றால் இப்படித் தான் அதிரடியாக செயல்பட வேண்டும்...' என, உத்தர பிரதேச முதல்வரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான யோகி ஆதித்யநாத்தை பாராட்டுகின்றனர், அந்த மாநில மக்கள்.
மக்களின் வரிச்சுமையை குறைப்பதற்காக, மத்திய அரசு சமீபத்தில் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, கார் முதல் மக்கள் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்கள் வரை, பலவற்றுக்கான, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கணிசமாக குறைக்கப்பட்டது.
ஆனால், இந்த வரி குறைப்பை சில கடைகள், சூப்பர் மார்க்கெட்கள் நடைமுறைப்படுத்த வில்லை என்ற குற்றச்சாட்டு பரவலாக எழுந்தது. குறிப்பாக, மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் பழைய விலைக்கே விற்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன.
இதையடுத்து, உ.பி., முதல்வர் யோகி ஆதித்யநாத் அதிரடியாக களத்தில் இறங்கினார். லக்னோ நகரில் உள்ள ஷாப்பிங் மால், சூப்பர் மார்க்கெட் உள்ளிட்ட கடைகளுக்கு அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, அவற்றின் உரிமையாளர்களிடம், எந்தெந்த பொருட்களின் விலை, எவ்வளவு குறைந்துள்ளது என்பது பற்றிய தகவல் பலகையை கடையின் முன் வைக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து, பெரும்பாலான கடைகள், முதல்வரின் உத்தரவை செயல் படுத்தின.
முதல்வரின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு, உ.பி., மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். 'மற்ற மாநிலங்களின் முதல்வர்களும் இதுபோல் அதிரடியாக களத்தில் இறங்கினால் தான், மக்களுக்கு பயன் கிடைக்கும்...' என்கின்றனர், உ.பி., மக்கள்.