
கிரண் குமார் ரெட்டியின் சீற்றம்!
தெலுங்கானா விவகாரத்துக்காக, தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த, அனைத்து கட்சி எம்.எல்.ஏ.,க்களும், தங்களது பதவிகளை ராஜினாமா செய்து, ஆந்திர சட்டசபை சபாநாயகர் மனோகரிடம், அதற்கான கடிதத்தையும் கொடுத்து விட்டனர். இந்த ராஜினாமா கடிதங்கள் குறித்து, சபாநாயகர் மனோகர், எந்த நடவடிக்கையும் எடுக்காமல், அமைதி காத்து வந்தார். தெலுங்கானா ஆதரவாளர்கள் நெருக்கடி அதிகரித்ததும், சமீபத்தில் இதுகுறித்து வாய் திறந்தார். 'உணர்ச்சி வசப்பட்ட நிலையில், எம்.எல்.ஏ.,க்கள், ராஜினாமா முடிவை எடுத்துள்ளனர். எனவே, அவர்களின் ராஜினாமாவை ஏற்கபோவது இல்லை'என, அறிவித்தார். சபாநாயகரின் இந்த பேச்சால், தெலுங்கானா எம்.எல்.ஏ.,க்கள், கடும் அதிருப்தி அடைந்தனர். சபாநாயகர் மனோகரை, கடுமையாக விமர்சித்தனர். 'மீண்டும் ஒருமுறை, எங்களின் ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடம் கொடுக்கப் போகிறோம். அதையும் அவர் ஏற்க மறுத்தால், அப்புறம் காட்டுகிறோம், நாங்கள் யார் என்பதை'என, ஆவேசமாக பேசினர். இந்த விவகாரம், முதல்வர் கிரண் குமார் ரெட்டியின் காதுகளுக்கு எட்ட, பதிலுக்கு, அவரும் ஆவேசம் அடைந்தார். 'நானும் சபாநாயகராக இருந்தவன் தான். எனக்கு சட்டசபை விதிமுறைகள் தெரியும். சபாநாயகரின் நடவடிக்கைகளை, சட்டசபைக்கு வெளியில் விமர்சிப்பதற்கு, யாருக்கும் உரிமை இல்லை. அப்படி மீறி விமர்சித்தால், ஜெயிலில் கம்பி எண்ண வேண்டியிருக்கும்'என்றார். முதல்வரின் இந்த அதிரடி அறிவிப்பை கேட்ட, தெலுங்கானா ஆதரவாளர்கள், வாயடைத்துப் போய் இருக்கின்றனர்.