PUBLISHED ON : நவ 03, 2025 12:00 AM

'எங்களை தோற்கடிக்க வேண்டும் என்று திட்டமிட்டே வேலை செய்கின்றனர்...' என புலம்புகிறார், தெலுங்கானா முன்னாள் முதல்வரும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ்.
தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. 2023ல் நடந்த சட்டசபை தேர்தலிலும், கடந்தாண்டு நடந்த லோக்சபா தேர்தலிலும், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சி படுதோல்வி அடைந்தது.
அடிமேல் அடி விழுந்ததால், துவண்டு போயிருந்த சந்திரசேகர ராவ், வரும், 11ம் தேதி நடக்கவுள்ள ஹைதராபாத், ஜூப்ளி ஹில்ஸ் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று, தன் செல்வாக்கை நிரூபிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இந்நிலையில், தேர்தல் கமிஷன் வெளியிட்டு உள்ள மாதிரி ஓட்டுச்சீட்டில், தங்கள் கட்சியின் தேர்தல் சின்னமான கார் போலவே, மற்ற சில வேட்பாளர்களின் சின்னமும் இருப்பதாக, சந்திரசேகர ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.
'சப்பாத்தி ரோலர், சூட்கேஸ், கேமரா, கப்பல் ஆகிய சின்னங்கள், எங்கள் கட்சியின் கார் சின்னம் போலவே இருக்கின்றன. வாக்காளர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி, எங்களை தோற்கடிப்பதற்காகவே இதுபோன்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுகிறது...' என, ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார், சந்திரசேகர ராவ்.
பிற அரசியல் கட்சியினரோ, 'அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்பது இதுதானோ...?' என, கிண்டல் அடிக்கின்றனர்.

